குஜராத் சட்டமன்றத்தில் பிப்ரவரி 25 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய மாநில பாஜக அமைச்சர் ஜகதீஷ் விஸ்வகர்மா, ”வழிபாட்டுத் தலங்களைச் சுற்றி, குறிப்பிட்ட மதத்தினரே அதிக ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர்” என்றார். இதற்கு, காங்கிரஸை சேர்ந்த ஒரே இஸ்லாமிய எம்.எல்.ஏவான இம்ரான் கெடாவாலா, கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஓர் அமைச்சராக இருந்துகொண்டு, சட்டமன்றத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முடியாது. குஜராத்தில் 6.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கைகள் உள்ளன. 2002 முதல் குஜராத்தில் ஊரடங்கு உத்தரவுகளோ அல்லது கலவரங்களோ இல்லை என அமைச்சர் கூறினார். அது உண்மையாக இருந்தால், சூரத், ராஜ்கோட், அகமபாத் உள்ளிட்ட இடங்களில், பதற்றமான பகுதிகளுக்கான சட்டம் ஏன் அமல்படுத்தப்படுகிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
மறுபுறம், சட்டமன்றத்தில் மீண்டும் மீண்டும் தாம் குறிவைக்கப்படுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார். "182 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் நான் மட்டுமே முஸ்லிம் எம்.எல்.ஏ.. என் சமூகம் தொடர்பான பிரச்னைகள் எழும்போதெல்லாம் நான் குற்றம்சாட்டப்பட்டவன் போல் சுட்டிக்காட்டப்படுகிறேன். குஜராத்தில் உள்ள முஸ்லிம்கள் அரசியல்ரீதியாக விழிப்புடன் இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் தங்கள் கவலைகளை எழுப்பக்கூடிய தகுதியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
அமர்வின்போது தனது மைக்ரோபோன் அணைக்கப்பட்டதாகவும், இதனால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்க முடியாமல் போனதாகவும் கெடாவாலா மேலும் குற்றம்சாட்டினார். அமர்வில், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள் தனக்கு ஆதரவளித்ததாகவும் அவர் எடுத்துரைத்தார்.