நாட்டில் செல்வந்தருக்குக் கிடைக்கும் தரமான மருத்துவம், பணம் இல்லை என்ற காரணத்தால் ஏழைக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதை முதன்மை நோக்கமாககொண்டு வாழ்ந்து வருகிறார் ENT அறுவை சிகிச்சை நிபுணர் நந்த்லால் மன்சேதா. தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் மாத வருமானத்திற்கு ஏற்ப, அவர்களே கட்டணத்தைத் நிர்ணயிக்கும் வித்தியாசமான முறையை பல ஆண்டுகளாக அவர் பின்பற்றி வருகிறார்.
ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர் 10 ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுபவர் 100 ரூபாயும், 1 லட்சம் வருமானம் ஈட்டுபவர் ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்தினால் போதும் என அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார். ஒருவேளை வருமானம் ஈட்டவில்லை என்றால் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் கூறியிருப்பது கவனிக்க வைக்கிறது. இதற்காக நோயாளிகள் எந்தவொரு வருமான சான்றும் எடுத்துவர வேண்டாம் என்றும், மனசாட்சிக்கு உண்மையாக இருந்து கட்டணத்தை செலுத்தினால் போதும் என்றும் அவர் கூறுவது வியக்க வைக்கிறது.
இதுமட்டுமின்றி, தனது அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் அறுவை சிகிச்சைக்கும் நிதியுதவி வழங்கியிருக்கிறார் மருத்துவர் நந்த்லால் மன்சேதா. இவரின் சேவைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.