குஜராத் மாநிலத்தில், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சமத் அப்துல் ரெஹ்மான் ஷா என்ற நபர் ஆஜரானார். கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அந்த நபர் மொத்தம் 74 நிமிடங்கள் கலந்து கொண்டார். அந்த நேரத்தில், அவர் கழிப்பறையில் அமர்ந்து ஓய்வு எடுத்தார். அதாவது, அவர் கழிப்பறை இருக்கையில் அமர்ந்து தனது ஹெட்செட்டை அணிந்து கொண்டு ஆஜரானார். இதுதொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது மொபைல் போனை தரையில் வைத்துக்கொண்டு தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்வதையும், எதிர்தரப்பில் நீதிமன்ற அறையில் வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைத்து வாதிடுவதையும் காண முடிகிறது.
இதுதொடர்பான வீடியொ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்ற விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஒருவர் செயல்படுவதற்கு பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். இந்த நிலையில், குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து அவர்மீது அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. எனினும், அந்த நபர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கத் தயாராக இருந்தார். ஆனால், நீதிமன்றம் அடுத்த விசாரணை நாளுக்குள் அவர் அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதித்துறையின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறி, அந்த வீடியோவை உடனடியாக அகற்றவும் தடை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.