சயீஃப் அலிகான் எக்ஸ் தளம்
இந்தியா

தொடரும் சோதனை.. ரூ.15 ஆயிரம் கோடி சொத்தை இழக்கும் சயீஃப் அலிகான்.. பின்னணி என்ன?

நடிகர் சயீஃப் அலிகான் தன்னுடைய 15 ஆயிரம் கோடி குடும்பச் சொத்துகளை இழக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கத்திக்குத்துக்குப்பின் மீட்கப்பட்ட சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான வங்கதேச நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சயீஃப் அலிகான் தன்னுடைய 15 ஆயிரம் கோடி குடும்பச் சொத்துகளை இழக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போபால் சொத்து

சையீஃப் அலிகானுக்கு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அவரது பட்டோடி குடும்பத்தின் மூதாதையர் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.15,000 கோடி அளவில் உள்ளது. நூர்-உஸ்-சபா அரண்மனை, தார்-உஸ்-சலாம், ஹபிபியின் பங்களா, அகமதாபாத் அரண்மனை, கோஹெஃபிசா சொத்து மற்றும் சைஃப் அலி கானின் கொடிப் பணியாளர் இல்லம் ஆகியவை அதில் அடக்கம்.

இந்தச் சொத்துக்கள் அனைத்தும், போபாலின் கடைசி நவாப் ஆக இருந்த ஹமீதுல்லா கான் உடையது ஆகும். அவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகள் அபிதா சுல்தான் 1950இல் பாகிஸ்தான் சென்றார். அதேசமயம், அவரது இரண்டாவது மகள் சஜிதா சுல்தானா இந்தியாவில் தங்கி, நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்துகொண்டு சட்டப்பூர்வ வாரிசானார். சஜிதா சுல்தானாவின் பேரன் சைஃப் அலிகான் ஆவார்.

இத்தகைய சூழ்நிலையில், சைஃப் அலிகான் இந்த சொத்துகளில் ஒரு பகுதியை மரபுரிமையாக பெற்றுள்ளார். எனினும், அபிதா சுல்தான் பாகிஸ்தான் சென்றதால், அது எதிரி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, 1947இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த மக்களின் சொத்துக்கள், ’எதிரி சொத்துக்கள்’ என்று கூறப்படுகிறது. சையீஃப் அலிகானின் குடும்பத்தின் சொத்துக்களும் இதேபோன்ற சொத்துக்கள்தான். அதன்படி, 1968 எதிரி சொத்து சட்டத்தின்கீழ், சஜிதா சுல்தான் சொத்துகளை மத்திய அரசு கொண்டு வர நினைத்தது. அப்படி எதிரி சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த சொத்து மத்திய அரசுக்கு சொந்தமாகிவிடும்.

இதையடுத்து மத்திய அரசின் நோட்டீஸை எதிர்த்து சைஃப் அலிகான் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசின் நோட்டீஸிற்கு தடை விதித்தது. இந்த நிலையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சையீஃப் அலிகான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது.

போபால் சொத்து

அத்துடன், மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பித்திருந்த தடையையும் நீக்கியது. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ஆனால், நீதிமன்றம் சொன்ன ஒரு மாத காலம் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மேல்முறையீடு செய்யாததால், அந்தச் சொத்தை மத்திய அரசு தற்போது பறிமுதல் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 72 ஆண்டுகளில் இந்த சொத்துக்களின் உரிமைப் பதிவுகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக போபால் ஆட்சியர் கௌசலேந்திர விக்ரம் சிங் அறிவித்துள்ளார். இந்தச் சொத்துக்களைக் கண்காணிக்கும் பணிகளில் பல குடும்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.