சயீப் அலிகான் கத்திக்குத்து வழக்கு.. வங்கதேச நபர் கைது!
பிரபல பாலிவுட் நடிகர் சயீஃப் அலிகான், கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தன் வீட்டிலேயே மர்ம நபர் ஒருவரால் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கத்திக்குத்துக்குப்பின் மீட்கப்பட்ட சயீஃப் அலிகான் தற்போது காயத்திலிருந்து உடல் நலம் தேறியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இதில், ஜனவர் 16 அன்றே மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். இருப்பினும் அவர் முக்கிய குற்றவாளி இல்லையென சொல்லப்பட்டது. இந்நிலையில் நடிகர் சயீஃப் அலிகானைக் கத்தியால் குத்திய நபர், மும்பை போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், கடந்த சில மாதங்களாக மும்பையில் வசித்து வந்துள்ளார் என்றும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் தீட்சித் கெடம், “நடிகர் கத்திக்குத்து வழக்கில் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். குற்றம்சாட்டப்பட்டவர் முகமது ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இந்திய ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்து தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக்கொண்டுள்ளார். அவர் மும்பையில் சுமார் நான்கு மாதங்களாக வசித்து வந்துள்ளார். மேலும் ஹவுஸ் கீப்பிங்காக பணிபுரிந்து வந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.