செய்தியாளர் - கார்த்திகேயன்
இணையத்தில் பல கோடிக் கணக்கான வெப்சைட்டுகள் இயங்கி வருகிறது. இதில், நமக்கு தேவையான வெப்சைட்டை தேடி கண்டுபிடிக்க உதவும் ஒரு பிரவுசர் தான் கூகுள் க்ரோம். கடந்த 2008-ஆம் ஆண்டு அன்று, கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிரவுசரை, உலக அளவில் 4 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய கணினிகளிலும், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் போன்ற ஸ்மார்ட் போன்களிலும், இது செயல்பட்டு வருகிறது. இவ்வாறு உலக அளவில், பாதிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் ஒரு பிரவுசரில், மிகப்பெரிய குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது, இந்திய அரசின் கீழ் இயங்கும் Indian Computer Emergency Response Team முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கூகுள் குரோம் பிரவுசரில் சில தீவிரமான தொழில்நுட்பக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி, ஹேக்கர்கள் பயனர்களின் சாதனங்களை எளிதில் ஊடுருவ முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கூகுள் க்ரோமில் உள்ள மல்டி பிராசஸ் பாதுகாப்பு அமைப்பை மீறி, பிரவுசரை முடக்குவது அல்லது தேவையற்ற சாப்ட்வேர் ஸ்கிரிப்ட்களை இயக்குவது போன்ற செயல்களில் ஹேக்கர்கள் ஈடுபடலாம் என்றும், எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு எச்சரிக்கைகளை தெரிவித்துள்ள இந்திய அரசின் அந்த அமைப்பு, அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்றும், அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, முதலில் கணினி அல்லது லேப்-டாப்பில் கூகுள் க்ரோம் பிரவுசரை திறக்க வேண்டும். பிறகு, வலது மூலையில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை க்ளிக் செய்து உள்ளே செல்லவும். பிறகு, Help என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உள்ளே சென்று, About Google Chrome ஆப்ஷனை தொடவும். இந்தப் பக்கத்திற்குச் சென்றவுடன், குரோம் தானாகவே புதிய அப்டேட்டுகள் உள்ளதா எனச் சோதித்து, புதிய பதிப்பை டவுன்லோட் செய்யத் தொடங்கிவிடும்.
இறுதியாக, Relaunch என்ற ஆப்ஷன் வரும். அதனை க்ளிக் செய்தால், பாதுகாப்பான புதிய பதிப்பிற்கு கூகுள் பிரவுசர் மாற்றப்பட்டுவிடும். பயனர்களின் சமூக வலைதள பாஸ்வேர்டுகள், வங்கி கணக்குகள் போன்றவற்றை ஹேக் செய்வதை, இதன்மூலம் தடுக்க முடியும். மேலும், தேவையற்ற தீங்கிழைக்கும் Malware-கள் உங்கள் சாதனத்திற்குள் நுழைவதும் தடுக்கப்படும் என்று, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.