reliance oil refinery reuters
இந்தியா

உலக நாடுகளில் எரிபொருள் நெருக்கடி! ரிலையன்ஸுக்கு அடித்தது ஜாக்பாட்? கவனம் ஈர்க்கும் ஜாம்நகர் ஆலை!

சர்வதேச சந்தையில் டீசல் தேவையும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன முக்கியத்துவம் இந்த ஆலைக்கு? ரிலையன்ஸுக்கு எப்படி லாப வாய்ப்பு உருவாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், போர் பதற்றங்கள் மற்றும் கடல் வழிப் போக்குவரத்துச் சிக்கல்கள் ஆகியவை எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, டீசல் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் சூழலில், இந்தியாவில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை முக்கியப் பங்கு வகிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஆலை, உலகின் மிகப்பெரிய ஒற்றை இட சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த வளாகம், பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களைச் சுத்திகரித்து டீசல், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இங்கிருந்து தயாரிக்கப்படும் எரிபொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

reliance oil refinery

இதில், தற்போது முக்கியமாகப் பேசப்படுவது வெனிசுலா நாட்டின் கனரக கச்சா எண்ணெய். பொதுவாக, கனரக கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிப்பது தொழில்நுட்ப ரீதியாகச் சவாலானது. ஆனால், ஜாம்நகர் ஆலையில் பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களைச் சுத்திகரிக்கும் வசதி இருப்பதால், வெனிசுலா எண்ணெய்யையும் சுத்திகரிக்க முடிகிறது. இதுவே சர்வதேச எரிசக்தி சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்புத் திறன் என்பது அந்த நிறுவனத்தின் வணிக வளர்ச்சியோடு மட்டும் தொடர்புடையதாக இல்லாமல், சர்வதேச எரிசக்தி விநியோகத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக, உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தொடர்ந்து பெறுவதில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. இத்தகைய சூழலில், கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதைத் தேவைக்கேற்ற எரிபொருளாக மாற்றி ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறன் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கலாம். அதேபோல், இந்தியாவின் சுத்திகரிப்புத் துறைக்கும் சர்வதேச சந்தையில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கலாம்.

reliance oil refinery

இருப்பினும், இந்தச் சூழல் நிறுவனத்துக்கு எவ்வளவு கூடுதல் லாபத்தை அளிக்கும் என்பது கச்சா எண்ணெய் விலை, சுத்திகரிப்புச் செலவு மற்றும் சர்வதேச எரிபொருள் விலை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தே அமையும்.

ஆக, உலக நாடுகள் எரிபொருள் விநியோகச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழலில், ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையின் திறன் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச எரிசக்தி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை ரிலையன்ஸ் நிறுவனம் எந்த அளவுக்குத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதுதான் இனி கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.