செய்தியாளர் : துர்கா தேவி சரவணன்
காலநிலைத் திட்டங்களில் சுகாதாரத்தை இணைப்பதில் இந்தியா 32-க்கு வெறும் 2 மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே காலநிலை மாற்றம், காற்று மாசு ஆகியவற்றால் இந்தியாவின் பருவநிலை நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டுக்கு (COP31) முன்னதாக, இந்த மதிப்பீட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய காலநிலை மற்றும் சுகாதாரக் கூட்டணி (Global Climate and Health Alliance - GCHA), 132 நாடுகளை உள்ளடக்கிய 117 தேசியக் காலநிலைத் திட்டங்களை ஆய்வு செய்தது. சுகாதாரத் தாக்கங்கள், காற்று மாசு, சுகாதாரத் துறையின் நடவடிக்கைகள், காலநிலை நிதி உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் மதிப்பீடு செய்து, 2026 “Healthy NDC Scorecard”-ஐ GCHA வெளியிட்டது.
இதில் இந்தியா 32-க்கு 2 மதிப்பெண் பெற்றுள்ளது. இந்தியாவுடன் ஜப்பான், அண்டோரா, கயானா, ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளும் 2 மதிப்பெண்ணில் உள்ளன. ஹோலி சீ (வாடிகன்) மட்டும் 1 மதிப்பெண்ணுடன் கடைசியில் உள்ளது. கொலம்பியா 29 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், நைஜீரியா 25, கம்போடியா 24 மதிப்பெண்களுடன் அடுத்த இடங்களிலும் உள்ளன.
அண்டை நாடுகளைப் பார்க்கும்போது, இலங்கை 19, நேபாளம் 19, வங்கதேசம் 13, பாகிஸ்தான் 12, பூட்டான் 10, மாலத்தீவுகள் 9, சீனா 9 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இதில் தெளிவாகக் காண முடிகிறது.
இந்தியாவின் மதிப்பெண் ஏன் இவ்வளவு குறைவு?
இதற்கான காரணங்களையும் GCHA விளக்கியுள்ளது.
இந்தியா உமிழ்வுத் தீவிரத்தைக் (emissions intensity) குறைக்கும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவின் NDC-யில் உள்ள உமிழ்வு இலக்கு “<3°C” பிரிவில் வருவதாகவும், அது “Insufficient” (போதாதது) என்றும் Climate Action Tracker மதிப்பிடுகிறது.
Climate Action Tracker-இன் பொதுத் தரநிலைகள்: 1.5°C-க்கு ஒத்தது (Paris Agreement compatible), <2°C என்பது “Almost sufficient”, <3°C என்பது “Insufficient”, <4°C என்பது “Highly insufficient”, 4°C-க்கு மேல் என்பது “Critically insufficient”. எல்லா நாடுகளும் அதே அளவு முயன்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வை இவை குறிக்கின்றன.
இது தவிர, சுகாதாரத் தாக்கங்களும், காலநிலை நடவடிக்கைகளால் கிடைக்கும் சுகாதாரம் சார்ந்த இணைப் பலன்களும் இந்தியாவின் NDC-யில் "அர்த்தமுள்ள வகையில் பேசப்படவில்லை" (not meaningfully addressed) என GCHA குறிப்பிட்டுள்ளது. காற்று மாசினால் அதிக இறப்புகள் ஏற்படும் நாடு இந்தியா. ஆனால் NDC காற்று மாசுபடுத்திகளைக் குறிப்பிடவே இல்லை என்றும் GCHA சுட்டிக்காட்டுகிறது.
இந்தியாவின் 2031-2035 காலத்துக்கான NDC, மார்ச் 2026-இல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. அதன் முக்கிய இலக்குகள்:
2005-உடன் ஒப்பிடும்போது, 2035-க்குள் பொருளாதார உற்பத்தியின் உமிழ்வுத் தீவிரத்தை 47% குறைத்தல்.
மொத்த மின் உற்பத்தித் திறனில் 60% புதைபடிவம் சாரா ஆதாரங்களிலிருந்து பெறுதல்.
காடுகள், மரப் பரப்பு மூலம் 350 முதல் 400 கோடி டன் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையான கூடுதல் கார்பன் உறிஞ்சியை உருவாக்குதல்.
இவை காலநிலைத் தணிப்புக்கு முக்கியமானவை என்றாலும், அவற்றின் சுகாதாரத் தாக்கமும் மதிப்பிடப்பட வேண்டும் என்பதையே இந்த மதிப்பெண் வலியுறுத்துகிறது.
இந்தக் காலநிலைப் பிரச்சினை வெறும் மதிப்பெண் பட்டியலைத் தாண்டி, இந்தியாவில் அதன் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உற்றுக் கவனிக்க வைக்கிறது.
இந்தியாவின் காற்று மாசு அதிக கவலையை அளிக்கிறது. 143 நாடுகளில் இந்தியா 6-வது மிக மாசுள்ள நாடு என IQAir-இன் 2025 உலகக் காற்றுத் தர அறிக்கை கூறுகிறது. காற்று மாசு அதிகமாக இருப்பதால், பலருக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, இதய நோய், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
GCHA வெளியிட்ட 2026 “Healthy NDC Scorecard”-ஐத் தொடர்ந்து, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மக்களின் சுகாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யும் வகையில் NDC திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.