எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்பூரில் நகைக்கடை வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரின் மகன் மனோஜ் பகத் (44). இவர்களின் வீட்டில் வேலைப் பார்த்து வந்தார் 17 வயது சிறுமி ஒருவர். மனோஜ், தனது சொந்த ஊரான போபாலுக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாகவும் தன்னுடன் சிறுமியை அனுப்பி வைக்கும்படியும் அவர்கள் வீட்டில் கேட்டுள்ளார். குடும்ப பயணம் என நினைத்து அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். காரில் செல்லும்போதுதான் அவருடன் குடும்பம் வரவில்லை என தெரிய வந்திருக்கிறது சிறுமிக்கு. பிறகு காரை நாக்பூர் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கு கொண்டு சென்றார் மனோஜ். அங்கு காரில் வைத்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு ஹாஸ்டல் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார். பின்னர் தனது கூட்டாளி ரஜத் மட்ரே (19)வை அழைத்துள்ளார். அவரும் சேர்ந்து சிறுமியை நான்கு நாட்கள் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் கொண்டு போய் விட்டனர். அப்போது, மனோஜ் போதையில் இருந்ததால் சிறுமியின் வீட்டில் சந்தேகம் வந்தது. இதையடுத்து விசாரித்தபோது சிறுமி கண்ணீர் விட்டபடி நடந்ததைச் சொன்னார். இதையடுத்து சிறுமியின் அம்மா, கிட்டிக்ஹடன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மனோஜ் மற்றும் ரஜத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தங்கள் ஆதரவாளர்கள் தங்கிக்கொள்வதற்கு எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கடிதம் கொடுத்தால் மட்டுமே ஹாஸ்டல் அறைகளில் தங்கிக்கொள்ள முடியும். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு எப்படி அறை கிடைத்தது என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.