ராஜஸ்தான்  முகநூல்
இந்தியா

ராஜஸ்தான் வந்த பிரெஞ்ச் சுற்றுலா பயணி.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்!

ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலமான உதய்பூரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் ஒருவர், பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பெண், மற்ற இரண்டு பெண் தோழிகளுடன் உதய்பூருக்கு ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காக வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விளம்பரப் படப்பிடிப்பை ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அப்பெண் கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியா வந்திருக்கிறார்.

கடந்த ஜூன் 22 ஆம் தேதியன்று, மாலை, பிரஞ்சு பெண், டெல்லியிருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு சென்றுள்ளார். அவரது நண்பர்கள் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சில ஊழியர்கள் உதய்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் ஹில்ஸில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். அங்கு அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். மேலும், அங்கு மது அருந்தியதாகவும் தெரிகிறது.

அப்போது அங்கு அறிமுகமான ஊழியரான சித்தார்த் என்ற நபர் நகரத்தை சுற்றிக்காட்டுவதாக அந்த பிரெஞ் பெண்ணிடம் கூறியுள்ளார். சித்தார்த் அழைப்பின் பேரில் அவரும் சென்றிருக்கிறார். பின்னர், அந்த பெண்ணை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற சித்தார்த் , அப்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தாக தெரிகிறது.

சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி யோகேஷ் கோயல் தெரிவித்தார்.

சம்பவம் குறித்து பிரெஞ்சு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி சித்தார்த் நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்டார்.