பீகார் மாநிலத்தில் மேற்கொண்டுள்ள ‘சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ (SIR’) தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு முக்கியக் கட்டளைகளை கடந்த வார இறுதியில் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
1. நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, அதற்குண்டான காரணங்களுடன் வெளியிடுங்கள்…
2. ‘ஆதார்’ அடையாள அட்டையை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று.
இந்த வழக்கில் விசாரணை மேலும் தொடரும்.
ஆனால், இந்தச் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் நீதிமன்ற விசாரணைக்கும் அப்பாற்பட்ட பல விவகாரங்கள் இருக்கின்றன. இந்த திருத்த நடவடிக்கையின் சில அம்சங்கள் இதுவரை நடைபெறாதவை… மிகவும் அச்சமூட்டுபவை.
முதலாவதாக, இதன் பெயர்: முன்பெல்லாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்றோ, ஒட்டுமொத்த திருத்தம் என்றோதான் அழைப்பார்கள்.
இரண்டாவதாக, மக்களவைக்கோ - மாநில சட்டப் பேரவைக்கோ தேர்தல் நடைபெற இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளன என்ற நிலையில் இப்படியொரு மாபெரும் நடவடிக்கையை இதுவரை எடுத்ததே இல்லை.
மூன்றாவதாக, இந்த வேலையைச் செய்ய எடுத்துக் கொண்டுள்ள அவகாசம் மிகவும் குறைவான காலக்கெடு; முப்பது நாள்களுக்குள் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்படுகின்றன. வாக்காளர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகளும் - உரிமை கோரல்களும் முப்பது நாள்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்கப்படவுள்ளன.
நான்காவதாக, இந்த நடவடிக்கைக்கான பரப்பெல்லை. இதற்கு முன்பெல்லாம் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்றால், அதற்கும் முன்னால் நடந்த பொதுத் தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலையே அடிப்படையாகக் கொண்டு பெயர் நீக்கலையும் சேர்த்தலையும் செய்தார்கள். இந்த சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் 2024 வரையிலான வாக்காளர் பட்டியலை கிட்டத்தட்ட அடியோடு நிராகரித்துவிட்டார்கள், புதிதாக வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் வேலையைச் செய்து வருகின்றனர் (இதற்கு ஆதாரம்: முந்தைய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா).
ஐந்தாவதாக, வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது, புதியவர்களைச் சேர்ப்பது தொடர்பாக ஆழ்ந்த மௌனம் சாதிக்கப்படுகிறது.
இறுதியாக, இந்த நடவடிக்கைக்குப் பிறகு ‘மாபெரும் எண்ணிக்கையில்’ வாக்குரிமையை இழக்கப் போகும் வாக்காளர்கள். மொத்தமுள்ள 7.89 கோடி வாக்காளர்களில், 22 லட்சம் வாக்காளர்கள் ‘உயிரோடு இல்லை’ என்றும் 7 லட்சம் பேர் ‘ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்’ என்றும், 36 லட்சம் பேர் ‘மாநிலத்தைவிட்டு நிரந்தரமாக வேறு எங்கோ குடியேறிவிட்டனர் அல்லது எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை’!
பிறப்பும் இறப்பும் இயற்கையானது. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியிலிலிருந்து நீக்க வேண்டும் என்பது சரியான நடைமுறைதான் என்றாலும், திருத்த நடவடிக்கையின்போது 18 வயதை எட்டிய புதிய இளம் வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்க வேண்டுவதும் சரியான செயல்தானே? பிஹார் மாநிலத்தின் குழந்தை பிறப்பு விகிதத்தைக் கருத்தில் கொண்டால், 18 வயதை எட்டியவர்கள் எண்ணிக்கை நிச்சயம் லட்சக்கணக்கில்தான் இருக்கும். அவர்கள் அனைவரும் சேர்க்கப்பட்டுவிட்டார்களா? இந்தக் கேள்விக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை, யாருக்கும் இதற்கான விடையும் தெரியாது.
பட்டியலில் உள்ளவர்களில் 36 லட்சம் பேர் ‘நிரந்தரமாக வேறெங்கோ குடியேறிவிட்டார்கள்’ அல்லது அவர்களில் ‘பெரும்பாலானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற முடிவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் எப்படி வந்தது? வீடு வீடாக புகுந்து தேர்தல் ஆணையம் கணக்கெடுத்ததா? பிஹார் மாநிலத்துக்கு வெளியே நிரந்தரமாக குடியேறிவிட்டோம் என்று வாக்காளர்களே தெரிவித்தார்களா? 36 லட்சம் பேர் எங்கிருக்கிறார்கள் என்று ஆணையம் விசாரணை நடத்தியதா? ‘தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் குடியிருப்பவர்கள்’ (வாக்காளர்கள்) என்று நீதிமன்றங்களால் விளக்கப்பட்ட அடிப்படைத் தகுதியை, ‘நிரந்தரமாக வெளியேறிவிட்டவர்கள்’ என்ற வார்த்தையைக்கொண்டு தேர்தல் ஆணையம் நிரப்புவது ஏன்? இதன் நோக்கம் யாருக்கும் தெரியாது.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கையானது நம்பிக்கைக்கு உரியதாக இல்லை; அதில் வெளிப்படையாக ஏதும் நடைபெறவில்லை; அதன் முடிவை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை, அதன் முடிவும் பகுத்தறிவுக்கேற்ப நம்பும்படியாக இல்லை. ‘ஏதோ ஒரு நோக்கில்’ இந்த சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது, அதற்கேற்ப அதன் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
ஆண்டுக்கு 0.89% என்ற அளவில் மக்கள் தொகை உயரும் நாட்டில், வாக்காளர் பட்டியலைத் திருத்தினால் இறுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்க வேண்டும், ஆனால் பிஹாரில் இதற்கு நேர் எதிராக வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் நோக்கமே, ஏராளமானோரின் வாக்குரிமையைப் பறிப்பதுதான். வரும் அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெறும்போது தங்களுக்கு வாக்குரிமை இருக்காது என்று ஆயிரக்கணக்கான பிஹாரிகள் அஞ்சுகிறார்கள். பிஹார் அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது பிற மாநிலங்களிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது லட்சக் கணக்கானவர்கள் எதிர்காலத்தில் வாக்குரிமை இழப்பார்கள்.
கர்நாடக மாநிலத்திலிருந்து திடுக்கிட வைக்கும் உண்மை வெளியாகியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பெங்களூர் மத்திய தொகுதியும் ஒன்று. அது எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. அந்தத் தொகுதியின் தேர்தல் முடிவை ஆராய்வோம். முதலில், மகாதேவபுரா என்ற ஒரு தொகுதியை சற்றே ஒதுக்கி வைப்போம். நான்கு பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மூன்று தொகுதிகளில் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். இந்த ஏழு தொகுதிகளின் வாக்குகளையும் ஒட்டுமொத்தமாகக் கூட்டினால் காங்கிரஸ் வேட்பாளர் 82,178 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மகாதேவபுரா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் 1,14,046 வாக்குகள் பெற்று, இறுதியாக 31,868 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடுகிறார். தபால் வாக்குகளும் சேர்ந்து அவரது வெற்றி வித்தியாசம் 32,707 வாக்குகள் ஆகியிருக்கிறது.
இந்த ஒரு காரணத்தினாலேயே இந்தத் தேர்தல் முடிவு சந்தேகத்துக்குரியது என்று கூறவில்லை. ஆனால் இந்தத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகள் பல செய்திருப்பதை காங்கிரஸ் தொண்டர் குழுக்கள் பல மாதங்கள் கடுமையாக அலைந்து திரிந்து விடா முயற்சியுடன் வாக்காளர்களின் பெயர்களையும் முகவரிகளையும் புகைப்படங்களையும் சரிபார்த்து கண்டுபிடித்துள்ளது. ஒரே வீட்டில் பல பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர். வாக்காளரின் தந்தையார் பெயர் அர்த்தமற்ற எழுத்துகளால் - புரிந்துகொள்ள முடியாதபடிக்கு இடம் பெற்றுள்ளது. வாக்காளர் அட்டையில் வயது ‘0’ முதல் ‘124’ வரையில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு பார்த்த உடனேயே தில்லுமுல்லுகள் தெரியும் விதத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இப்போதைய கேள்வி எல்லாம், இப்படி பார்த்த உடனேயே தில்லுமுல்லுகளுக்கான ஆதாரங்கள் கிடைத்தால் அதை உடனடியாக தீர விசாரித்தாக வேண்டாமா, நேர்மையுள்ள மனிதராக இருந்தால் - ஆம் விசாரிக்க வேண்டும் என்பார். ஆனால் இந்தியத் தேர்தல் ஆணையமோ சாதாரண மனிதர் அளவுக்குக்கூட இயல்பாகச் செயல்படவில்லை. தான் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமான அமைப்பு என்று கருதும் தேர்தல் ஆணையம் - வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்குக் கூட பதில் சொல்லும் கடமை தனக்கு இருப்பதாக நினைக்கவில்லை. தனக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம் காரணமாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தலைவர்கள் (சபா நாயகர்கள்), இந்தப் புகார்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கும் போக்கினாலும் துணிச்சல் பெற்று தன்னையே நீதிமன்றமாகவும் கருதுகிறது; ‘புகார்கள் இருந்தால் உரிய வகையில் - உறுதிப் பத்திரத்துடன் தெரிவிக்குமாறும், புகார்கள் உண்மையானவை என்று சத்தியப் பிரமாணம் எடுக்க வேண்டும் என்றும்’ கோருகிறது!
மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் செய்துள்ள தில்லுமுல்லுகள் காரணமாக அது நம்பத்தகுந்தது அல்ல என்ற உண்மையை வேறு வெளிவிவகாரங்கள் மூலம் திசை திருப்ப விட்டுவிடக் கூடாது.
மீண்டும் கூறுகிறேன்: இந்த விவகாரத்தில் மையமாக இருப்பது வாக்காளர் பட்டியல்கள் குறித்த நம்பகத்தன்மைதான், அது மகாதேவபுரா சட்டப் பேரவைத் தொகுதியாக இருந்தாலும் சரி – பிஹார் மாநில வாக்காளர்கள் பட்டியலாக இருந்தாலும் சரி. இந்தியத் தேர்தல் ஆணையம் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளித்தாக வேண்டும், இன்றைக்கு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் (ஆட்சி மாறிய பிறகு) ‘நியாயத் தீர்ப்பின் நாளின்போது’ அது பதில் சொல்லியே தீர வேண்டும்.