p chidambaram, waqf x page
இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும் | வக்ஃப்: கிடைத்தது இடைக்கால நீதி!

வக்ஃப் மசோதாவின் சில பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. இது ஆளும் அரசுக்கு மிகப்பெரிய அவமானம், அரசின் சட்ட அமைச்சகம் எப்படி மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

ப. சிதம்பரம்

வக்ஃப் மசோதாவின் சில பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. இது ஆளும் அரசுக்கு மிகப்பெரிய அவமானம், அரசின் சட்ட அமைச்சகம் எப்படி மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் ஏதேனும் ஒரு பிரிவை உச்ச நீதிமன்றமோ, உயர் நீதிமன்றமோ செல்லாது என்று தீர்ப்பளிப்பது ஆளும் அரசையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முட்டியில் தட்டி வைப்பதைப் போன்றது. அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு முரணானது ஒரு மசோதா என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த பிறகும், நாடாளுமன்றத்தில் அதை விடாப்பிடியாகக் கொண்டுவந்து தங்களுடைய பெரும்பான்மை உறுப்பினர் வலிமையில் நிறைவேற்றிக்கொண்டது அரசு. அதன் சில பிரிவுகள் அரசமைப்புச் சட்டக் கூறுகளுக்கு முரணாக இருப்பதால் செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றமே அறிவிப்பது ஆளும் அரசின் கன்னத்தில் ஓங்கி அறைவதைப்போல.

sureme court, waqf board

மிகவும் மோசமான இந்த நடைமுறையை ஒரு முறை மனக்கண்ணில் கொண்டுவந்து பாருங்கள்:

நாடாளுமன்றத்தில் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. பிறகு அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. இத்தகைய மசோதாவைக் கொண்டுவரும் ஆற்றல் நாடாளுமன்றத்துக்குக் கிடையாது என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டுக்குழுவின் ஆய்விலும் எதிர்க்கின்றனர். இருப்பினும் அரசு இந்த எதிர்ப்புகளையும் லட்சியம் செய்யாமல் புறந்தள்ளி மசோதாவை தனது கூட்டணிக்கிருக்கும் ஆதரவின் உதவியுடன் நிறைவேற்றிவிடுகிறது. பிறகு அந்த மசோதாவின் சில பிரிவுகள் செல்லத்தக்கதல்ல என்று நீதிமன்றம் அறிவிக்கிறது. இது ஆளும் அரசுக்கு மிகப்பெரிய அவமானம், அரசின் சட்ட அமைச்சகம் எப்படி மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. இதுதான் வக்ஃப் திருத்த மசோதா, 2025இன் கதை.

அரசமைப்புச் சட்டத்துக்கும் மேல் அல்ல..

இந்த சட்டத்தின் முக்கியப் பிரிவுகள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 2025 செப்டம்பர் 15இல் தீர்ப்பளித்துள்ளது. இருந்தும் மத்திய அரசு பெருமிதத்துடன் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதுடன் முஸ்லிம் தனிச் சட்டத்தின் ஒரு பகுதியை சீர்திருத்தம் செய்யும் தங்களுடைய முயற்சியை ‘நீதிமன்றமும் அங்கீகரித்துவிட்டதாக’ கூறிக் கொள்கிறது.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் 2025 ஏப்ரல் 6இல் நான் எழுதிய கட்டுரையை (Malice Toward Muslims) தயவுசெய்து வாசியுங்கள். நாடாளுமன்ற விவாதத்தில் எழுப்பப்பட்ட சில கேள்விகளை அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவற்றுக்கு அரசிடமிருந்து பதில் இல்லை. ஆனால் அந்த மசோதாவைப் பிடிவாதமாக ஆதரிக்கும் வாதங்களையே அரசு முன்வைத்தது. உச்ச நீதிமன்றம் எங்களுடைய கேள்விகளுக்கு இடைக்கால விடைகளை, நாங்கள் நன்றி பாராட்டும் வகையில் அளித்திருக்கிறது.

ப சிதம்பரம்

1. இந்த சட்டத்தின்படி, வக்ஃப் சொத்தை உருவாக்கும் ஒருவர், தான் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்ஸாத்தைப் பின்பற்றுகிறவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ‘இஸ்லாத்தைப் பின்பற்றுகிறேன் என்பதை எப்படி ஒருவர் காட்சி விளக்கமாக நிரூபிப்பார்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘இஸ்லாத்தை ஒருவர் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பற்றுகிறாரா என்பதற்கான விதிகளை மாநில அரசுகள் உருவாக்கும் வரையில், அதற்குரிய 3-வது துணைப் பிரிவின் கூறு (ஆர்), செயல்பாட்டுக்கு வராது’ என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. (இதைப் போன்ற நிபந்தனை வேறு எந்த மதத்தின் தனிச்சட்டத்திலும் அரசால் விதிக்கப்படவில்லை).

2. ”வக்ஃப் சொத்தாக வழங்கப்பட்டதற்கு அரசும் உரிமை கோரினால், அரசு அதிகாரி அதை விசாரித்து அதன் உரிமையை இறுதியாகத் தீர்மானிப்பார்; அதிகாரி அப்படி தீர்மானிக்கும்வரை அது வக்ஃப் சொத்தாக கருதப்படமாட்டாது; அது அரசின் சொத்துதான் என்று அந்த அதிகாரி தீர்மானித்தால், வருவாய்த்துறை ஆவணங்களில் அவர் ‘உரிய திருத்தங்களை’ செய்வார்” என்கிறது சட்டம். ‘தான் சம்பந்தப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியாகவும் நீதிபதியாகவும் அரசே செயல்படுவதுபோல ஆகாதா இந்த நடைமுறை?’ என்று நாங்கள் கேட்டிருந்தோம். இந்த சட்டத்தின் 3 சி பிரிவில் துணைப் பிரிவு (2), துணைப் பிரிவு (3), துணைப் பிரிவு (4) ஆகியவற்றின் மீது இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

3. வருவாய்த்துறை ஆவணங்கள் ‘திருத்தப்பட்ட பிறகு’, அந்த சொத்தின் மீதான வக்ஃப் உரிமை இழக்கப்பட்டுவிடும். ‘இது நிர்வாக நடவடிக்கை மூலம் வக்ஃப் சொத்தை (அனுமதியின்றி எடுப்பது அல்லது பறிப்பது) அரசு கைப்பற்றுவதாக ஆகிவிடாதா?’ என்று கேட்டிருந்தோம். ‘இப்படிப்பட்ட சொத்துகளின் மீதான உரிமையை உரிய நீதித்துறை மேல் முறையீட்டு நடுவர் மன்றமோ, உயர் நீதிமன்றமோ இறுதியாக தீர்மானிக்கும் வரை வக்ஃப் சொத்தின் உரிமையை அரசு கைக்கொள்ள முடியாது, மூன்றாவது தரப்புக்கு இதில் உரிமைகள் வழங்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கவும் முடியாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

waqf board

4. மாநில வக்ஃப் வாரியங்களிலும் மத்திய வக்ஃப் பேரவையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் உறுப்பினர்களாகவும் - ஏன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கூட நியமிக்கப்படலாம் என்று வக்ஃப் சட்ட திருத்தம் – என்னுடைய பார்வையில், விஷமத் தனமாகவே – கூறுகிறது. ‘பிற மதங்களின் நிர்வாகச் சட்டங்களிலும் இதே போன்ற பிரிவு சேர்க்கப்படுமா?’ என்று அரசைக் கேட்டோம். இந்து மத அறக்கட்டளைகளிலும் நிறுவனங்களின் நிர்வாக அமைப்பிலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்களா என்று கேட்டோம். முஸ்லிம்களை மிகவும் காயப்படுத்தக்கூடிய இந்த துணைப் பிரிவின் மீது உச்ச நீதிமன்றம் முழுமையான இடைக்காலத் தடையை விதிக்கவில்லை, அதே சமயம் மத்திய வக்ஃப் நிர்வாகப் பேரவையின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 முஸ்லிம் அல்லாதவர்களையும் மாநில வக்ஃப் வாரியங்களின் 11 உறுப்பினர்களில் 3-க்கும் மிகாமல் பிற மத உறுப்பினர்களையும் நியமிக்கலாம் என்று இடைக்கால தீர்ப்பில் வரம்பு நிர்ணயித்திருக்கிறது. அத்துடன் தலைமை நிர்வாக அதிகாரியாக ‘முஸ்லிம் ஒருவரைத்தான் நியமிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் விதித்திருக்கிறது.

பணியவைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் பணியவில்லை...

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிப்பதற்கு முன்னால் உச்ச நீதிமன்றம் மூன்று நாள்கள் வாத – பிரதிவாதங்களைக் கேட்டது; முழுமையாக இல்லாவிட்டாலும் சட்டத்தின் முக்கியப் பிரிவுகள் மீது வாதங்கள் நடந்தன. ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் முன்னதாக உச்ச நீதிமன்றம் இப்படி மூன்று நாள்களுக்கு விவாதங்களை அனுமதித்ததே வழக்கத்துக்கு மாறானது. இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வரும்போது மேலும் பல கருத்துகளைத் தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும். இதற்கிடையே, இந்த இடைக்கால தடையால், தான் அடைந்துள்ள காயங்களை இந்த அரசு அவ்வளவு எளிதில் மறந்துவிடாது, தனது இந்துத்துவக் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சிறுபான்மைச் சமூகங்களை இன்னும் எப்படியெல்லாம் துன்புறுத்தலாம் என்றுதான் தீவிரமாக யோசிக்கும்.

தீமையைச் செய்யும் உள்நோக்கமே வக்ஃப் திருத்த சட்டத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 26-வது பிரிவை இந்த அரசு முழுமையாகப் பின்பற்றி நடக்க வேண்டும்:

“எல்லா மத அமைப்புகளும் அல்லது அமைப்புகளின் உறுப்புகளும் தங்களுடைய மதம் சார்ந்த செயல்களுக்கும் அறக்கட்டளைகள் மூலமான நோக்கங்களுக்கும் உரிய நிறுவனங்களை ஏற்படுத்தி, அவற்றை நிர்வகிக்கலாம்…” என்கிறது அந்தப் பிரிவு.

இந்த நாட்டின் பல்வேறு மத – இன தன்மையை உண்மையிலேயே காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும் – குறிப்பாக இந்துக்கள் – வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும்.

வக்ஃப், நாடாளுமன்றம்

சரிந்தது இந்தியா...

இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20.2 கோடி, கிறிஸ்தவர்கள் 3.2 கோடி என்று 2025ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. இந்து மதம் பழமையானதாக இருக்கும் அதே நிலையில் கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் உலக அளவில் மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. நாம் மதச்சார்பற்றவர்கள், சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்று நமக்குள்ளேயே நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உலகம் வேறு நோக்கில் நம்மைப் பார்க்கும்; நம்முடைய அரசின் சட்டங்கள், அரசின் செயல்கள், மக்களுடைய சமூக நடத்தைகள் ஆகியவற்றை வைத்துத்தான் நம்மை எடைபோடும். வக்ஃப் திருத்த சட்டமானது உலகின் பார்வையில் இந்தியாவின் மதிப்பை மிகவும் சரித்துவிட்டது.