imf, Urjit Patel  எக்ஸ், ராய்ட்டர்ஸ்
இந்தியா

IMF நிர்வாக இயக்குநராக RBIயின் முன்னாள் ஆளுநர் நியமனம்.. யார் இந்த உர்ஜித் படேல்?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக உர்ஜித் படேல் நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநராக மூன்று ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய நிதி நிறுவனத்தில் பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உர்ஜித் படேல், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் பணவியல் கொள்கையில் அவரது நிபுணத்துவத்திற்காகப் போற்றப்படுகிறார். சர்வதேச நாணய நிதியம் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் கடன் பாதிப்புகள் மற்றும் வர்த்தக இயக்கவியல் மாறிவரும் நிலையில் படேலின் நியமனம் வந்திருப்பது மாற்றத்தைத் தரும் என நம்பப்படுகிறது. மத்திய வங்கியாளராகவும் சர்வதேச பொருளாதார நிபுணராகவும் அவரது அனுபவம், கொள்கை விவாதங்களை வடிவமைப்பதிலும், பலதரப்பு மன்றங்களில் இந்தியாவின் குரலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

உர்ஜித் படேல்

யார் இந்த உர்ஜித் படேல்?

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் பி.எஸ்சி., ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில். மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி. ஆகியவற்றை முடித்துள்ள படேல், 1990களின் முற்பகுதியில் IMFஇல் இந்தியாவின் சார்பில் பணியாற்றினார். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) முதலீட்டு நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனத்தில் (IDFC) மூத்த பதவிகளையும் வகித்துள்ளார். தேசியப் பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் தலைவராகவும், புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் மூத்த உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

ரகுராம் ராஜனுக்குப் பிறகு, உர்ஜித் படேல் செப்டம்பர் 2016இல் இந்திய ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் குறிப்பிடத்தக்க கொள்கை தலையீடுகளால் குறிக்கப்பட்டது, இதில் பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார கொந்தளிப்பை நிர்வகித்தல் ஆகியவை அடங்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையில் அவருக்கும் மத்திய அரசுக்கும் சில பிரச்னைகள் இருந்தபோதும், தனிப்பட்ட காரணங்களால் அவர், டிசம்பர் 2018 முதல் விலகினார்.

imf

சர்வதேச நாணய நிதியம் என்பது என்ன?

நிதிப் பிரச்னைகளைச் சமாளிக்கும் பொருட்டு, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் வழங்கக்கூடிய ஒரு சர்வதேச அமைப்பாக விளங்கி வருகிறது. இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த அமைப்பானது தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.