IMFலிருந்து விலகும் கீதா கோபிநாத்.. மீண்டும் ஹார்வர்டில் பணி!
நிதிப் பிரச்னைகளைச் சமாளிக்கும் பொருட்டு, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் வழங்கக்கூடிய ஒரு சர்வதேச அமைப்பாக விளங்கி வருகிறது. இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த அமைப்பானது தன்னுடைய உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் 2வது இடத்தில் உள்ள அதிகாரியாக இருப்பவர் கீதா கோபிநாத். கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணிக்குச் சேர்ந்தார். இதன்மூலம், அந்தப் பதவியில் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெயரெடுத்தார். தொடர்ந்து கடந்த ஜனவரி 2022ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் முதல் துணை நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இந்த நிலையில், கீதா கோபிநாத் ஆகஸ்ட் மாதம் பதவி விலக இருப்பதாகவும், அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கீதா கோபிநாத், “நான், தற்போது கல்வித் துறைக்குத் திரும்ப உள்ளேன். அங்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள சர்வதேச நிதி மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தில் ஆராய்ச்சி எல்லையைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகிறேன். அடுத்த தலைமுறை பொருளாதார வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். முன்னதாக, IMFஇல் சேர ஹார்வர்டை விட்டுச் சென்ற கீதா கோபிநாத், மீண்டும் பொருளாதாரப் பேராசிரியராக பல்கலைக்கழகத்திற்குத் திரும்பவுள்ளார். அதேநேரத்தில், உலகப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதிகள் மீதான அதிக வரிகளுடன் நீண்டகால அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவரவும் முயன்று வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்வின் இத்தகைய சூழ்நிலையில், கீதா கோபிநாத்தின் விலகல் அவ்வமைப்பின் வல்லநர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், அவ்வமைப்புக்கு வேறொரு நபரைப் பரிந்துரைக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.