ஓம் பிரகாஷ் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகா டிஜிபி கத்திக்குத்து மரணம் | காரணம் என்ன? மனைவி சொன்ன ஷாக் நியூஸ்!

கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி கத்திக்குத்துடன் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Prakash J

1981-ஆம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான ஓம் பிரகாஷ், 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில், முன்னாள் டிஜிபியான 68 வயதான ஓம் பிரகாஷ், நேற்று பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது வயிறு மற்றும் மார்பில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இந்த சம்பவம் பற்றி பிரகாஷின் மகன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், அவரது மனைவிதான் முக்கிய சந்தேக நபர் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரும், அவரது மகளும் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி பிரகாஷின் மகன் கார்த்திகேஷ், “எனது அம்மா பல்லவி, கடந்த ஒரு வாரமாக என் தந்தையை கொலை செய்வதாக மிரட்டி வந்தார். என் அம்மா பல்லவியும், என் சகோதரி கிருதியும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். என் தந்தையின் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நான் உறுதியாக சந்தேகிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

ஓம் பிரகாஷ் குடும்பம்

இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களுக்கு முன், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடும்பத்தினர் உள்ள வாட்ஸாப் குரூப்பில் பல்லவி ஒரு தகவல் பகிர்ந்திருந்துள்ளார். அதில், ”ஓம்பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுகிறார். எந்த நேரத்திலும் என்னை கொல்ல வாய்ப்பு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இதனால் உயிரை பாதுகாத்துக்கொள்ள, ஓம்பிரகாஷை, பல்லவி தீர்த்துக்கட்டியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், ஓம்பிரகாஷுக்கும், பல்லவிக்கும் இடையில் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ஓம்பிரகாஷ் உத்தர கன்னடாவில் வேலை செய்த போது, தண்டேலியில் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை, அவரது தங்கைகள் பெயரில் பதிவு செய்து உள்ளார். மனைவி, மகன், மகள் பெயரிலும் சொத்து வாங்கி இருந்த ஓம்பிரகாஷ், தங்கைகள் பெயரில் பதிவு செய்த நிலத்தை பற்றி பேசக்கூடாது என்று பல்லவியிடம் கூறி இருக்கிறார். இது தான் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. நேற்று மாலையும் இருவருக்கும் இடையில் சண்டை நடந்துள்ளது. உச்சக்கட்ட கோபத்தில் இருந்த பல்லவி, கத்தியால் ஓம்பிரகாஷ் உடலில் 10க்கும் மேற்பட்ட முறை, சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். ஓம்பிரகாஷை கொன்ற பின், ஓய்வு பெற்ற இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி மனைவிக்கு, பல்லவி வீடியோ காலில் பேசி உள்ளார். அவரிடம், 'அந்த அரக்கனை கொன்றுவிட்டேன்' என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து பல்லவியின் வாட்ஸ் அப் தகவல்களைச் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

karnataka

அதன்படி, ”நான் ஓம் பிரகாஷிடம் ஒரு பிணைக்கைதியாக உள்ளேன். நான் எங்குச் சென்றாலும் ஓம்பிரகாஷின் முகவர்களால் எப்போதும் கண்காணிப்பில் இருக்கிறேன். மேலும், அவருடைய ரிவால்வரை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, பல வருடங்களாக நான் அவரைப் பிரிந்து வாழச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தேன், ஆனால் அதில் எந்தப் பலனும் இல்லை. நான் தனியாக எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்வதே அவரது வேலையாக உள்ளது. மேலும், அவர் என்னுடைய உணவில் விஷம் கலந்துகொடுத்து என்னைக் கொல்ல முயன்றார். இதனால், நானும் எனது மகளும் துன்பப்பட்டோம். எங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு பிரகாஷே காரணம். ஒருநாள், சாலையில் நான் நடந்துசென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு வேனில் இருந்த ஒருவர் கொஞ்சம் பொடியை என்மீது தூவினர். அதனால் என் உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. அப்போதுத எனக்கு அது புரியவில்லை. ஆனால், இது எல்லாவற்றுக்கும் அவர்தான் காரணம். நீங்கள் நம்பமாட்டீர்கள் என்பதாலேயே இந்த நிகழ்வுகளை முன்பு குறிப்பிடவில்லை” என வாட்ஸ் அப் குழுவில் தெரிவித்துள்ளார். இவையெல்லாம் உண்மையா அல்லது அவரது மகன் குறிப்பிட்டப்படி உண்மையிலேயே அவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறாரே என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை, அவர் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், இத்தகைய செய்திகளை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.