உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பீகார் மாநிலத்தில் சந்தாலி மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி ஜார்க்கண்ட் என அழைக்கப்பட்டது. 1972-ம் ஆண்டு மேற்கு வங்க இடதுசாரி தொழிற்சங்க தலைவர் ஏகே ராய், குர்மி மகாதோ தலைவர் பினோத் பிகாரி மகாதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை உருவாக்கியவர்தான் ஷிபு சோரன்.
இந்தியாவின் பழங்குடியின அரசியல்வாதிகளில் மிகவும் முக்கியமானவர் ஷிபு சோரன். 2005 முதல் 2010 வரை 3முறை ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். எட்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் தற்போது ராஜ்யசபா எம்.பியாக உள்ளார். மேலும், மன்மோகன் பிரதமாராக இருந்தபோது அவர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிலக்கரி துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இந்தவகையில், ஒரு மாதத்திற்கும் மேலாக, சிறுநீரகக் கோளாறால் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்துள்ளார் ஷிபு சோரன். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
ஷிபு சோரனின் மகனும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது தந்தையின் மரணச் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அன்பான டிஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஷிபு சோரனின் இறுதிச்சடங்கு ஜார்க்கண்ட்டில் நடைபெற உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.