Indigo Flight Pt Desk
இந்தியா

இண்டிகோ விமானத்தின் மோசமான சேவை.. இன்ஃபோசிஸ் முன்னாள் அதிகாரி புகார்!

பொருளாதார நிபுணரும், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை அதிகாரியுமான மோகன்தாஸ் பாய், இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

Prakash J

சமீபகாலமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர, அநாகரிகச் செயல்களும் நடைபெற்று வருகின்றன. மேலும் திடீரென உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்திய விமானச் சேவைகளில் ஒருசில விமான நிறுவனங்களின் சேவைகள் அதிருப்தியடைவதாக பயணிகள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இதில், அவ்வப்போது ’இண்டிகோ’ நிறுவனத்தின் சேவையையும் பயணிகள் குறைகூறி வருகின்றனர். சமீபத்தில்கூட, உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்த நிறவனமும் இடம்பிடித்திருந்தது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103வது இடத்தில் இருந்தது. ஆனால், இதை இண்டிகோ நிறுவனம் மறுத்திருந்தது.

indigo

இந்த நிலையில், பொருளாதார நிபுணரும், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை அதிகாரியுமான மோகன்தாஸ் பாய், இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். பெங்களுருவிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் தான் உட்கார வைக்கப்பட்டதாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். பயணிகளின் எதிர்ப்பிற்குப் பிறகே ஏசி இயக்கப்பட்டது குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர், "இண்டிகோ தனது பயணிகளை மோசமாக நடத்துகிறது. பெங்களூரு விமானத்தில் ஏசி இல்லாமல் 6E 7407இல் அமர்ந்திருக்க முடிகிறது. பயணிகளின் பிரச்னைகளைத் தீர்க்க வழியில்லை. ஒரு போராட்டத்திற்குப் பிறகே, ஊழியர்கள் ஏசியை இயக்க உதவினர். இதுபோன்ற தவறான நெறிமுறைகளை இண்டிகோ நிறுவனம் மாற்ற வேண்டும்” என அதில் பதிவிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், “எங்கள் விமான நிலையக் குழுவைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. இண்டிகோவில், வாடிக்கையாளர் வசதி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்களின் கருத்து குறிப்பிடப்பட்டதாக நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். மேலும் அதைத் தேவையான குழுவுடன் நாங்கள் பகிர்ந்துகொள்வோம். உங்கள் பொறுமை மற்றும் புரிதலை மதிப்பாய்வு செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

என்றாலும், இவ்விவகாரம் இணையத்தில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. பயனர்கள் பலரும் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.