Indigo Flight
Indigo FlightPt Desk

மோசமான விமான சேவை | 103வது இடத்தில் இண்டிகோ.. பட்டியலை ஏற்க முடியாது என நிறுவனம் மறுப்பு!

உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இண்டிகோ நிறுவனமும் இடம்பிடித்துள்ளது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103வது இடத்தில் உள்ளது.
Published on

இந்தியாவில் விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களில் ’இண்டிகோ’ நிறுவனமும் ஒன்று. இந்த நிலையில், அந்த நிறுவனம் உலகின் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103வது இடத்தில் உள்ளது.

AirHelp Score Report நிறுவனம், ஆண்டுதோறும் உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, அதன் தரப்பட்டியலை வெளியிடும். வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்PT

அந்த வகையில் 54க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ நிறுவனமும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103வது இடத்தில் உள்ளது. சரியான நேரத்தில் வழங்கப்படும் சேவை, வாடிக்கையாளர் சேவை மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் இண்டிகோ பின்தங்கியுள்ளது.

Indigo Flight
திடீரென எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற இளைஞர்.. இண்டிகோ விமானம் தரையிறங்கும் போது நிகழ்ந்த பரபரப்பு

ஆனால், இதை இண்டிகோ நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் மிகவும் விருப்பமான விமான நிறுவனமாக விளங்கும் IndiGo, அந்த ஆய்வின் முடிவுகளை ஏற்க மறுக்கிறது. IndiGo தொடர்ந்து நேரத்தைக் கடைப்பிடிப்பதிலும் வாடிக்கையாளர் சேவை விஷயத்திலும் சரியான தரத்தைப் பெற்றுள்ளது" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ”ஐரோப்பிய ஒன்றிய உரிமைகோரல் செயலாக்க நிறுவனமான AirHelp வெளியிட்ட தரவான, உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையால் பயன்படுத்தப்படும் முறை அல்லது இழப்பீட்டு வழிகாட்டுதல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

DGCA தரவுகளின்படி, இண்டிகோ ஜனவரி முதல் செப்டம்பர் வரை 7.25 கோடி பயணிகளை ஏற்றிச் சென்று 61.3 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து டாடா குழுமத்தால் இயக்கப்படும் ஏர் இந்தியா, 1.64 கோடி பயணிகளுக்கு மேல் பறந்து 13.9 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. 380க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட இண்டிகோ தினசரி சுமார் 2,100 விமானங்களை இயக்குகிறது. 85க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களையும் 30க்கும் மேற்பட்ட சர்வதேச நகரங்களையும் அது இணைக்கிறது. ஏர்ஹெல்ப் அறிக்கையில், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இந்தியாவின் பிற விமான நிறுவனங்களான ஏர் இந்தியா 61வது இடத்திலும், ஏர் ஏசியா 94வது இடத்திலும் உள்ளது.

Indigo Flight
”என்ன ஒரே கரப்பான்பூச்சியா இருக்கு..” - பயணி பதிவிட்ட வீடியோ.. பதறி விளக்கம் கொடுத்த இண்டிகோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com