ராகுல் காந்தி- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்
ராகுல் காந்தி- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் x வலைதளம்
இந்தியா

புல்வாமா தாக்குதல் | “மரணித்தவர்களை வைத்து டிராமா நடத்தினர்” - பாஜக மீது சத்யபால் மாலிக் தாக்கு!

PT WEB

ராகுல் காந்தி உடனான நேர்காணலில், பீகாரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "அவர்கள் கேட்டது வெறும் 5 விமானங்கள். 4 மாதங்களாக போராடியும் உள்துறை அமைச்சகம் அதை நிராகரித்தது!

புல்வாமா தாக்குதலை பாஜக வேண்டுமென்றே செய்தது என சொல்ல மாட்டேன். ஆனால், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. புல்வாமா தாக்குதலை அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டார்கள்.

நீங்கள் வாக்களிக்கும் போது புல்வாமாவில் வீரமரணம் அடைந்தவர்களைப் பற்றி நினைத்துக்கொள்ளுங்கள் என மீண்டும் மீண்டும் சொன்னார்கள். புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்தவர்களை வைத்து டிராமா நடத்தினர். பிரதமர் ஸ்ரீநகருக்கு வந்திருக்க வேண்டும். நானும் ராஜ்நாத் சிங்கும் சென்ற அன்றே பிரதமரும் அங்கு வந்திருக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் நடந்த போது, மோடி கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கொண்டிருந்தார். நான் சிலமுறை அவரை தொடர்பு கொள்ள முயன்றேன்.

ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை. 6 மணி அளவில், என்ன நடந்தது என கேட்டார். ‘நம்முடைய தவறால் வீரர்களை இழந்துவிட்டோம்’ என்றேன். ‘அமைதியாக இருங்கள். இப்போது எதுவும் இதுகுறித்து பேச வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார். இரண்டு செய்தி நிறுவனங்களுக்கு இதுகுறித்து பேசியிருந்தேன். இனி இதுகுறித்துப் பேச வேண்டாம் என தோவால் என்னிடம் பேசினார். மூன்று நாட்கள் பொறுமையாய் காத்திருந்தேன். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

மோடியின் அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. ராணுவ வீரர்கள் கேட்ட ஐந்து விமானங்களைக் கொடுத்திருந்தால் புல்வாமா தாக்குதலே நடந்திருக்காது. என் அதிகாரத்திற்குள் இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பேன். உள்துறை அமைச்சரின் கையெழுத்துக்காக நான்கு மாதங்கள் அந்த விண்ணப்பங்கள் காத்திருந்தன. இறுதியாக அவற்றை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. அதனால் அவர்கள் வேறு வழியின்றி சாலை பாதையை தேர்வு செய்தனர்.

புல்வாமா தாக்குதல்

சாலை பாதை பாதுகாப்பனது அல்ல என்பதால்தான் நான்கு மாதங்களாக காத்திருந்தேன். ராணுவ வீரர்கள் கேட்டது வெறும் ஐந்து விமானங்கள்தான். ஆனால் நிராகரிக்கப்பட்டார்கள். ராணுவ வீரர்களின் மரணத்தை தேர்தலுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள். பாகிஸ்தான் இதைச் செய்திருக்கிறது. நம் வீரர்கள் இறந்திருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்." என்று பேசியுள்ளார்.