பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது. இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து மத்திய அரசின் வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் நேற்று செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது பேசிய விக்ரம் மிஸ்ரி, “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதுடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தது. வழிபாட்டுத் தலங்களை தாக்கவில்லை என பாகிஸ்தான் பொய் சொல்கிறது.
மதவாத பிரச்னையை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் இந்தியாவிடம் ஒருபோதும் பலிக்காது. ஒட்டுமொத்த இந்தியாவும் பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது. அமெரிக்காவிடம் ’ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி எடுத்துரைத்துள்ளோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஆலோசித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளது. உலக நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக கர்தார்பூர் வான் வழித்தடம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. பாகிஸ்தானுக்கு செல்லும் நிதியுதவிகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சர்வேதச நாணய நிதியத்திடம் பேசப்படும். பூஞ்ச் பகுதியில் குருத்வார் ஒன்றை பாகிஸ்தான் தாக்கியது. சீக்கிய வழிபாட்டுத் தலங்களை இந்தியா தாக்குவதாக பாகிஸ்தான் வதந்தி பரப்புகிறது. நமது நாட்டின் மீது நாமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுவது அப்பட்டமான பொய். பாகிஸ்தான் ராணுவத்தின் செயல் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “சிர்சா மற்றும் சூரத்நகரில் உள்ள விமானப்படை நிலையங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. அடம்பூரில் உள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. இந்தியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு, மின் அமைப்புகள், சைபர் அமைப்புகள் ஆகியவற்றின் பெரும் பகுதிகள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை” எனத் தெரிவித்தார்.