இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் 4-வது நாளாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா முறியடித்தது. மேலும் பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திப்புரா, ஜம்மு உள்பட இந்தியாவின் 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குலை வானிலேயே இந்தியா அழித்தது.
தொடர்ந்து, குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய, கர்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்திருப்பதாக தெரிவித்தனர்
மேலும், “எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளோம். விமானப்படை தளங்கள் அருகே உள்ள மருத்துவ கட்டமைப்புகளை பாகிஸ்தான் தாக்கியது.
பாகிஸ்தானின் ஆயுதக் கிடங்குகள் , ரேடார் அமைப்புகள் உள்ளிட்டவை தாக்கப்பட்டன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ட்ரோன், பிற ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நமது S400 பாதுகாப்பு அமைப்புக்கு எந்த சேதமும் இல்லை. பாகிஸ்தான் பரப்பும் தவறான தகவலை நம்ப வேண்டாம். சொந்த குடிமக்களே விமர்சிப்பது பாகிஸ்தானை ஆச்சரியப்படுத்தலாம்" என்று தெரிவித்துள்ளனர்.