வெளியுறவுத்துறை செயலர் முகநூல்
இந்தியா

போர் நிறுத்த அறிவிப்பு... விமர்சனத்துக்குள்ளான வெளியுறவுத்துறை செயலர்!

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்பு இணையதளத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.

இதில், 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா, சவுதி அரேபியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தின.இந்தநிலையில், கடந்த மே 10 ஆம் தேதி அமெரிக்காவின் தலையீட்டால் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான மோதல் உடனடியாக முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பிற்கு பிறகுதான் சமூக வலைதளங்களில் இவர்மீதான தாக்குதல் தொடங்கியது.

மிஸ்ரி போர் பதற்றம் முடிவுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்ததை தொடர்ந்து அவரை, “ துரோகி, தேசத்துரோகி, நம்பிக்கை துரோகி’ என்ற அவதூறான வார்த்தைகளால் இணையதள வாசிகள் வசை பாட ஆரம்பித்தனர், மேலும், மிஸ்ரியின் மகள்களின் குடியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர் சிலர். மேலும், அவரது குடும்பத்தையும் நெட்டிசன்கள் அவதூறான கருத்துக்களை கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால்,தனது பொது எக்ஸ் தளப்பக்கத்தையே லாக் செய்து பிரைவேட் அக்கவுண்ட்டாக மாற்ற வேண்டிய சூழல், அவருக்கு உருவானது. இந்நிலையில், மிஸ்ரிக்கு முன்னாள் வெளியுறவுச் செயலர் நிருபமா மேனன் ராவ், அரசியல் பிரமுகர்கள் அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி, ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளின் சங்கமும் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய நிர்வாக சேவை (IAS) சங்கம் வெளியிட்டுள்ள பதிவில் , "நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசு ஊழியர்கள் மீது தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் மிகவும் வருந்தத்தக்கவை. ” என்று பதிவிட்டுள்ளது.

இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வருந்தத்தக்க தனிப்பட்ட தாக்குதல்களை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். தங்கள் கடமைகளைச் செய்ய உறுதிபூண்டுள்ள அரசு ஊழியர்கள் மீதான இத்தகைய தேவையற்ற தாக்குதல்கள் முற்றிலும் சகிக்க முடியாதவை." என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.