“பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை பற்றி பாகிஸ்தானியர்களிடம் கேளுங்கள்” - யோகி ஆதித்யநாத்!
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் ராணுவ நிலைகள், விமான தளங்களை தாக்குவதற்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், நிலம், கடல் மற்றும் வான்வழிகளில் இருந்து ஏவக்கூடிய மல்டி-ரோல் சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் உற்பத்தியை அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளன.
இதன் ஒருபகுதியாக, இதற்கான உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் புதிய ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற போது யோகி ஆதித்யநாத் இதை தெரிவித்தார். இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
இதில் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “ பிரம்மோஸ் ஏவுகணை என்றால் என்ன என்பதை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அதன் கிளிம்ப்ஸை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை பார்க்காதவர்கள் பிரம்மோஸ் ஏவுகணையின் வலிமை குறித்து பாகிஸ்தானியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
எந்தவொரு தீவிரவாத செயலும் தேசத்துக்கு எதிரான போராகக் கருதப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்கும் வரை, இந்தப் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் இருக்காது. அதை நசுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்காக, முழு இந்தியாவும் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட வேண்டும்.
தீவிரவாதத்துக்கு அதன் பாஷையில் பதில் கொடுக்க வேண்டும். அதற்கான மெசேஜை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகத்துக்கு இந்தியா சொல்லியுள்ளது” என தெரிவித்துள்ளார்.