உத்தரப்பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகதி யாதவ் (22). இவரும் அனுராக் யாதவ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருப்பினும், அவர்களது காதலை பெற்றோர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு (மார்ச் 5) முன்பு பிரகதிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திலீப் என்பவருக்கு அவரைக் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத பிரகதி, தனது கணவரைத் தீர்த்துக்கட்ட காதலருடன் சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மார்ச் 19 அன்று, திலீப் ஒரு வயலில் பலத்த காயமடைந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
எனினும், அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போதும் அடுத்த சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, திலீப்பின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிரகதியும் அவரது காதலனும் திருமணத்திற்குப் பிறகு சந்திக்க முடியாததால், கணவரைக் கொல்ல முடிவு செய்ததாகத் தெரியவந்தது. பின்னர் இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற ஒப்பந்தக் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.