கேரளாவில் திடீர் வெள்ளப்பெருக்கு pti
இந்தியா

கேரளா | திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு.. 6 பேர் மரணம், பலர் மாயம்!

இடுக்கியில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துவருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

கேரளா இடுக்கி மாவட்டத்தில் திடீர் கனமழையால் மூணாறு, வண்டிப்பெரியாறு, வாகமண் பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டது. வட்டவாடா கொட்டகம்பூரில் நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் மாயம் என அச்சம். 27 பேரை மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் சேர்ந்து மீட்டனர். முதல்வர் நேரடி கண்காணிப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பெய்த திடீர் கனமழையால் மூணாறு, வண்டிப்பெரியாறு, வாகமண் உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

காட்டாறுகள் ஒன்றிணைந்து ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆங்காங்கே சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் இரவு நேரத்தில் மலைப்பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மரணம்..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவாடாவில் உள்ள கொட்டகம்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் பூக்கோட்டும்பாடத்தில் உள்ள கோட்டப்புழா டி.கே. காலனியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி. சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பெண் ஒருவர் உட்பட சுமார் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆறுகளில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததை அடுத்து. ஆற்றின் நடுவில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் 27 பேரை உள்ளூர் மக்களும், நிவாரண உதவிக் குழுவின் உறுப்பினர்களும் மீட்டனர். இருப்பினும், பலரால் பாதுகாப்பான இடங்களை அடைய முடியாததால், அவர்கள் நீண்ட நேரம் வெவ்வேறு இடங்களில் தவித்தனர்.

காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டனர். ஒவ்வொரு மணிநேரமும் நிலைமையை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.