தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (பிப்.8) தொடங்கியது. அதன்படி, டெல்லியில் பாஜக அடுத்து ஆட்சியமைக்க இருக்கிறது. தற்போது வரை பாஜக 48 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், 41 இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், அதில் 20 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலையில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிரபலங்கள் யார் எனப் பார்ப்போம்..
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் மேற்கு டெல்லி முன்னாள் எம்பி பர்வேஷ் சாஹிப் சிங்கும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்பி சந்தீப் தீட்சித்தும் களமிறக்கப்பட்டனர். இதில் 30,088 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார். அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகள் பெற்று 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த வாக்குகள்தான் காங்கிரஸ் வேட்பாளிடம் சென்றுள்ளது. சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகள் பெற்றுள்ளார்
டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா, ஜங்புராவில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் தர்விந்தர் சிங் மர்வாவும் காங்கிரஸ் சார்பில் ஃபர்கத் சூரியும் களமிறக்கப்பட்டன. இதில் பாஜக வேட்பாளர் மர்மா 38,859 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். மணிஷ் சிசோசியா 38,184 வாக்குகள் பெற்றபோதும், வெறும் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கேயும் காங்கிரஸ் வேட்பாளரே வாக்குகளைப் பிரித்துள்ளார். ஃபர்கத், 7,350 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஆம் ஆத்மியின் மற்றொரு மூத்த தலைவர்களில் சவ்ரப் பரத்வாஜும் ஒருவர். இவர் கிரேட்டர் கைலாஷ் தொகுதி களமிறக்கப்பட்டார். இவர், அந்த தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் ஆவார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஷிகா ராயும், காங்கிரஸ் சார்பில் கர்வித் சிங்கியும் களமிறக்கப்பட்டனர். இதில் ஷிகா ராய் 49,594 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரிடம், பரத்வாஜ் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த தொகுதியில் காங்கிரஸ் 6,711 வாக்குகள் பெற்றுள்ளது.
ஆம் ஆத்மியின் உயர் அமைப்புகள், அரசியல் விவகாரக் குழு மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினரான துர்கேஷ் பதக். இவர் டெல்லியின் ராஜிந்தர் நகர் தொகுதியில் பாஜகவின் உமாங் பஜாஜிடம் தோல்வியடைந்தார். பஜாஜ் 46,671 வாக்குகள் எடுத்து பதக்கை 1,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். இந்த தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வினீத் யாதவ், 4,015 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐஏஎஸ் பயிற்சியாளராக இருந்து ஆம் ஆத்மி கட்சிக்குள் நுழைந்தவர், அவத் ஓஜா. தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஓஜா, கிழக்கு டெல்லியின் பட்பர்கஞ்சியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்தத் தொகுதியை மணீஷ் சிசோடியா தொடர்ச்சியாக மூன்று முறை வென்றிருந்தார். இந்த முறை, அவர் ஜங்புராவுக்கு மாறி தோல்வியைத் தழுவினார். அதேநேரத்தில், ஓஜாவும் பாஜகவின் ரவீந்தர் சிங் நேகியிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர், 28,072 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். பாஜக வேட்பாளர் ரவி நேகி 74,060 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் 16,549 வாக்குகள் பெற்றுள்ளார்.