மும்பை அருகே மகாராஷ்டிரா தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
இன்று (9.6.2025) காலை மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து தானேவின் கசாரா பகுதியை நோக்கிச் சென்ற உள்ளூர் ரயிலில் இந்த பயங்கர விபத்து நடந்திருக்கிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது 10 க்கும் மேற்பட்டோர் ரயிலிருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பணிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் அதிகம் பேர் ரயிலில் பயணித்துள்ளனர். இந்தநிலையில்தான், பயணிகள் அதிக கூட்ட நெரிசலிலும் கதவுகளில் தொங்கியபடி பயணம் செய்திருக்கின்றனர். இதனால், நிலைதடுமாறிய பயணிகள் சிலர் ரயிலிருந்து கீழே விழுந்துள்ளனர்.
இந்த விபத்தில் குறைந்தது 10 முதல் 12 பேர் வரை கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது.