திருப்பதி ரயில் நிலையம் அருகே சுத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈஷார் ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென்று நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராயல் சீமா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினுக்கும் தீ பரவி இன்ஜின் கருகி பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விரைவு ரயிலின் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது.
இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க இணைப்பைத் துண்டித்து ரயில் பெட்டிகளை தூரமாக எடுத்துச் சென்றனர். பயணிகள் யாரும் காயமின்றி மீட்கப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அனைத்து ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த இந்திய ரயில்வே, முடிவு செய்துள்ளது. வடக்கு ரயில்வேயில் நடத்தப்பட்ட சோதனை முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
74,000 பெட்டிகள் மற்றும் 15,000 இன்ஜின்களில் கேமராக்கள் நிறுவ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் நான்கு டோம் (DOME) வகை சிசிடிவி கேமராக்கள், மற்றும் ஒவ்வொரு இன்ஜினிலும் ஆறு கேமராக்கள் பொருத்தப்படும். இவை பொதுவாக நடமாடும் பகுதிகள் மற்றும் கதவுகளுக்கு அருகில் நிறுவப்படும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிவேக ரயில்களிலும், குறைந்த வெளிச்சத்திலும் ரயில்கள் பயணிக்கும்போது கூட கேமராவில் பதிவாகும் காட்சிகள் உயர்தரமாக இருப்பதை உறுதி செய்ய அமைச்சர் வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பதி ரயில் நிலையம் இந்திய அளவில் முக்கியமான நூறு தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றாகும். இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதிக்கு சேவை செய்கிறது. இது திருமலை வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய போக்குவரத்து இடமாக உள்ளது. தற்போது இங்கு ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ரயில் நிலையத்தைச் சுற்றி இலவச பார்க்கிங் வசதி உள்ளது. சக்கர நாற்காலிக்கு ஏற்ற நுழைவாயில் மற்றும் பார்க்கிங் வசதிகளும் இங்கு உள்ளது. ஆன்சைட் சேவைகள் மற்றும் உணவகங்களும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் இங்கு உள்ளன. மேலும் ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்கவும், பயணிகளுக்கு உதவவும் பணியாளர்கள் அதிகமாக இங்கு பணியில் இருப்பார்கள்..