2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான நகைக்கடன் பெறுவோருக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்களிக்கவும், அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய விதிமுறைகளை அமல்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஆர்.பி.ஐ.க்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பான 9 புதிய விதிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை பாமர மக்களை அதிகம் பாதிப்பதாக இருந்ததால், அரசியல் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரால் அதிகம் விமர்சனத்திற்குள்ளானது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நகைக் கடன் சார்ந்த கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நிதி அமைச்சகம் நகைக்கடன் பெறுவது தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் தனது எக்ஸ் தள பதிவில் , வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இதுபோன்ற புதிய விதிமுறைகளை கள அளவில் செயல்படுத்துவதற்கு கால அவகாசம் தேவைப்படும். அதனால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விதிமுறைகளை செயல்படுத்தலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. வரைவு வழிகாட்டுதல் குறித்து பெறப்பட்ட கருத்துகளை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.