நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர்
நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர் ட்விட்டர்
இந்தியா

”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!

Prakash J

தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என அறிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக இயற்றப்பட்ட சட்டத் திருத்தங்களை ரத்து செய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியிருந்தது. 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை மூன்று வாரத்திற்குள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்திடம் திட்டு வாங்கி வந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஒருவழியாக தேர்தல் பத்திர வரிசை எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. பின்னர் அதுகுறித்த முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து யார் யாருக்கு, எவ்வளவு தொகை, ரெய்டுக்குப் பின் தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனங்கள் என பல்வேறு அரிய செய்திகள் தினம்தினம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், தற்போது கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது.

இதையும் படிக்க: மாண்டியாவில் களமிறக்கப்பட்ட குமாரசாமி; பாஜக கைவிட்டதால் கடும் அதிருப்தியில் சுயேட்சை எம்.பி சுமலதா!

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தேர்தல் பத்திரங்கள் விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும். இந்த விவகாரம் காரணமாக பாஜக மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையேதான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம், தற்போது இருப்பதைவிட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும்.

இந்த விவகாரம் பாஜக மற்றும் மத்திய அரசை கடந்து பொதுமக்களிடம் அதிவேகமாகச் சென்றடைய தொடங்கிவிட்டது. அனைவருக்கும் இந்தத் தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய தொடங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என நான் நினைக்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவுக்கு எதிராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் நிதியமைச்சராய் அங்கம் வகித்துவரும் நிர்மலா சீதாராமனின் கணவரே, இப்படிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த நான்காண்டுகளில் (ஏப்ரல் 2019 முதல் 15 பிப்ரவரி 2024) தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்ச நன்கொடையைப் பெற்ற கட்சியாக பாஜக இருக்கிறது. அவர்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் ரூ.6,986 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக எஸ்பிஐ அளித்த தகவல்களின்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மஹுவாவை சாய்க்க பாஜக கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்.. களமிறக்கப்பட்ட ராஜமாதா.. யார் இந்த அம்ரிதா ராய்?

யார் இந்த பரகலா பிரபாகர்?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும் படித்தவர் பிரபாகர். மனைவி நிர்மலா சீதாராமன், பா.ஜ.கவை சார்ந்தவராக இருந்தபோதும், கடந்த சில ஆண்டுகளாக பரகலா பிரபாகர் மத்திய பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதி வருகிறார் பரகலா பிரபாகர். எந்தக்கட்சியிலும் இல்லை என்றாலும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர். அதனை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். ஆனாலும், அவரது கவனம் அனைத்தும் பாஜக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதிலேயே இருந்து வருகிறது.

பா.ஜ.க. தலைமையிலான கடந்த ஒன்பதாண்டு ஆட்சியை விமர்சித்து இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis' என்ற பெயரில் நூலாக வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. 2024-ல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால், அது பேரழிவாக இருக்கும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவர் ஆந்திர அரசிற்கு ஆலோசகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.