இந்தியா

கடத்தப்பட்ட 12 வயது மகள் - ’Taken’ திரைப்பட பாணியில் மீட்ட தினக்கூலி தொழிலாளி தந்தை

Sinekadhara

கடத்தப்பட்ட தனது மகளை 'Taken’ திரைப்பட பாணியில் மீட்டுள்ளார் உத்தரபிரதேசத்தில் ஒரு தினக்கூலி தொழிலாளி தந்தை.

மும்பையிலுள்ள புறநகர் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹித் கான்(24). இவர் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவர் செப்டம்பர் 4ஆம் தேதி அதேப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர் ஒருவரின் 12 வயது மகளை பக்கத்தில் குர்லாவிற்கு ஷாப்பிங் கூட்டிச்செல்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குர்லாவிற்கு பதிலாக சூரத் பஸ் ஏறி, அங்கிருந்து டெல்லிக்கு ரயிலில் அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு தனது தாயிடம் சாக்குப்போக்கு சொல்லி வெளியேறிய சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், தனது மகளை யாரோ கடத்திவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தினக்கூலி தொழிலாளியான சிறுமியின் தந்தை, ’Taken’ திரைப்படத்தில் வரும் லியாம் நீசன் கதாபாத்திரம் போன்றே, புகாரோடு நிற்காமல் அக்கம்பக்கத்தினர் மற்றும் உள்ளூரில் தனது மகளைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

தனது மகளைக் கூட்டிசென்ற இளைஞர் அலிகார் அருகே உள்ள ஐத்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்ததும், உள்ளூர் போலீஸ் மற்றும் கிராமத்தினர் உதவியோடு குற்றவாளியை தேடிப்பிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’சூரத்திற்கு பேருந்தில் கூட்டிச்சென்றபோது அந்த இளைஞர் போதையில் இருந்ததாகவும், அப்போது எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், எனது மகள் கூறுகிறாள். அவளது வாக்குமூலத்தின்படி, குற்றவாளிமீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்று கூறினார். மேலும் கடத்தல் குற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 363-இன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தை வைத்து மேலும் வேறு பிரிவுகளிலும் வழக்குத் தொடர வாய்ப்புள்ளதாகவும் நிர்மல் நாகர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.