நாடாளுமன்ற வளாகத்தை நோக்கி விவசாயிகள் நடத்திய டெல்லி சலோ பேரணியை ஒட்டி டெல்லி மற்றும் நொய்டாவின் சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின் போராட்டக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறிய நிலையில், போக்குவரத்து சற்றே சீராகி வருகிறது.
பாரதிய கிசான் பரிஷத் மற்றும் பிற விவசாய அமைப்புகளின் தலைமையில் விவசாயிகள், விவசாய சீர்திருத்தங்களின் கீழ் இழப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) சட்டரீதியான உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். கூடுதலாக, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) உள்ளிட்ட பிற விவசாய அமைப்புகளும் டிசம்பர் 6 முதல் டெல்லியை நோக்கி நடைபயணம் நடத்த திட்டமிட்டுள்ளன.
நொய்டாவில் உள்ள மகா மாயா மேம்பாலத்தின் கீழ் இருந்து டெல்லி நோக்கிய பேரணி தொடங்கியது. விவசாயிகள் நடைபயணமாகவும், ட்ராக்டர்களிலும் இந்த பேரணியில் சென்றனர். பிப்ரவரியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளில் விவசாயிகளின் முந்தைய டெல்லியை நோக்கிய பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய பேரணியிலும், அமிட்டி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சர்க்கா சவுக் மற்றும் தலித் பிரேர்னா ஸ்தால் போன்ற இடங்களில் காவல்துறையினர் விவசாயிகளைத் தடுக்க தடுப்புகளை அமைத்திருந்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட மத்திய அரசின் உத்தரவாதங்களுக்கான கோரிக்கைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், காலதாமதம் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள் பேரணி அறிவிப்பை அடுத்து, பயணிகள் தங்கள் பயணங்களை எச்சரிக்கையுடன் திட்டமிடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்படி திட்டமிட்டபோதும், கடுமையாக போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் ஏற்பட்டது.
டெல்லி-என்சிஆர் சாலைகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் போக்குவரத்துக் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வரும் சூழலில் டெல்லி முழுவதுமே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்புக்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் போலீஸ் கமிஷ்னர் சாகர் சிங் கல்சி விவசாயிகள் போராட்டம் மற்றும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசினார். அதில், “கிழக்கு டெல்லி எல்லைகளில் போதுமான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கண்காணிப்புக்காக ட்ரோன்களைப் பயன்படுத்துகிறோம். போக்குவரத்து காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு காவல்துறையின் இணை ஆணையர் சிவஹரி மீனா கூறுகையில், “விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அதிகாரிகளும் அதற்கு உறுதி அளித்துள்ளனர். போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஹரியானா விவசாயத்துறை அமைச்சர் ஷ்யாம் சிங் ராணா விவசாயிகளின் போராட்டத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், “அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. முந்தைய விவசாயிகளின் போராட்டங்களிலாவது மூன்று வேளாண் சட்டங்கள் எனும் பிரச்னை இருந்தது. ஆனால், அதையும் பிரதமர் மோடி ரத்து செய்துவிட்டார். அப்படியிருந்தும் இப்போது நடந்துள்ள விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப் மாநிலத்திற்குத்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.