வங்கிகளில் நிதிப் பரிவர்த்தனையின்போது காசோலைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன. பெரும்பாலும் காசோலைகள், பணத்தை மாற்றுவதற்கான ஒரு பாதுகாப்பான ஆவணமாகச் செயல்படுகிறது. அந்த வகையில், காசோலையைப் பயன்படுத்துவதற்கு என புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகி இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. குறிப்பாக, ‘கருப்பு மையால் எழுதப்பட்ட காசோலைகள் ஏற்றுக்கொள்ளப் படாது’ என தகவல் பரவியது. இதனால் வங்கிப் பயனர்கள் பலரும் குழப்பமடைந்தனர். ஆனால், அது வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது.
வைரலான அந்தச் செய்தியில், ‘புதிய வழிகாட்டுதல்களின்படி, கருப்பு மையில் எழுதப்பட்ட காசோலைகள் 01 ஜனவரி 2025 முதல் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் காசோலைகள் செல்லுபடியாகும் என்று கருதப்பட நீல அல்லது பச்சை மையில் எழுதப்பட வேண்டும். காசோலைகளில் முறைகேடு மற்றும் மாற்றங்களை தடுக்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது, தவறானது. இதில் உண்மையல்ல” என்று PIBயின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், காசோலைகளில், எந்த நிற பேனாவில் எழுத வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டு நெறிமுறையையும் உருவாக்கி வெளியிடவில்லை என்றும், இதுதொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளது. வழக்கமாக, வங்கி காசோலைகளில் நீலம் மற்றும் கருப்பு நிற பேனாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், காசோலையை நிரப்புவதற்கு வெவ்வேறு வண்ண மைகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இது காசோலையை செல்லாததாக மாற்றலாம்.