'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி
குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைக்க தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கும் காசோலைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
குறைந்தபட்ச கணக்கு இருப்பு தொகை தேவைப்படாத வங்கிக் கணக்குகளே ஜனதன் கணக்குகள் எனப்படுகின்றன. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட இக்கணக்கில் காசோலைகள் உள்ளிட்ட வசதிகள் ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் அதற்காக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை பின்பற்றியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளைத் தளர்த்தி காசோலைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, இருப்பு வைக்கத் தேவையில்லாத அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கும், மற்ற சேமிப்பு கணக்குகளைப் போல் காசோலை உள்ளிட்ட குறைந்தபட்ச சேவைகளைக் கட்டணம் இன்றி வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறைந்தபட்ச இருப்புதொகை வைக்க தேவையில்லாத வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், 4 முறை ஏடிஎம்களில் பணம் எடுப்பது, வங்கிக் கிளைகளில் பணம் டெபாசிட் செய்வது, ஏடிஎம் டெபிட் அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட சேவைகளையும் வழங்குமாறு ரிசர்வ் வங்கி சம்பந்தபட்ட வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமலே அனைத்து வசதிகளையும் பெற முடியும் என கூறப்படுகிறது.