ex ips officer who now in bjp bhaskar rao salms siddaramaiah govt in bengaluru stampede PT
இந்தியா

”உங்கள் கைகளில் ரத்தக்கறை”| பெங்களூரு கமிஷனர் சஸ்பெண்ட் ஏன்? - பாஜகவில் இணைந்த Ex IPS அதிகாரி சாடல்!

ரசிகர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Prakash J

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பெங்களூரு சின்னசாமி மைதான கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம், கர்நாடகாவில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிலும், இவ்வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, “இது நியாயமற்றது” எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாஸ்கர் ராவ், ”இது கர்நாடக காவல்துறை வரலாற்றில் கறுப்பு நாள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2019 முதல் ஆகஸ்ட் 2020 வரை நகர காவல்துறைத் தலைவராகப் பணியாற்றிய பாஸ்கர் ராவ், எக்ஸ் தள பதிவில் இதுகுறித்து விமர்சித்துள்ளார். "அரசாங்கத்தின் கைகளில் இரத்தக்கறை படிந்துள்ளது. இப்போது அதன் மனதையும் இழந்துவிட்டது. அரசாங்கம் இப்போது பேரழிவில் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், தன்னுடைய பதவிக் காலத்தின்போது அப்போதைய முதல்வர் சித்தராமையாவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்த ஒரு சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அதற்காக அவருடைய தனிப்பட்ட உதவியாளர் தன்னை 20 முதல் 22 முறை போனில் அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தவிர, "அரசியல்வாதிகள் மனதளவில் மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

rcb fans victory

கர்நாடகாவில் ஆம் ஆத்மி கட்சியின் முகமாக 11 மாதங்கள் இருந்த பிறகு, மார்ச் 1, 2023 அன்று பாஸ்கர் ராவ் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.