பெங்களூரு ரசிகர்கள் உயிரிழப்பு.. போலீஸ் கமிஷனர் சஸ்பெண்ட்.. கடுமையாகச் சாடிய கிரண் பேடி!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே வீரர்கள் பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். இவர்கள் சின்னசாமி மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்தா உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கர்நாடகா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ”போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டது நியாமானது, பகுத்தறிவானது அல்ல” என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒவ்வொரு வழக்கும் தனித்தன்மை வாய்ந்தது. கமிஷனர் எல்லாவற்றையும் புறக்கணித்தாரா? கமிஷனரை எப்படி நீங்கள் சும்மா குற்றம்சாட்ட செய்ய முடியும்? இது நியாயமற்றது. அவர் தனிமையில் பணியாற்றவில்லை. பெங்களூரு மக்களுக்கு யார் என்ன பங்கு வகித்தார்கள் என்பதுகூட தெரியாது. இந்த நிகழ்வில் அவர் தனியாக இல்லை. அரசியல் தலைவர்களும் இருந்தனர். பகுத்தறிவு இல்லாத, நியாயமான, விளக்கப்படாத எந்தவொரு இடைநீக்கமும் அதிகாரிகளுக்கான மன உறுதியைக் குலைப்பதாகும். இது மிகவும் அவசரமாகச் செய்யப்பட்டது. அவர் தனியாக இல்லை. மொத்த அமைப்பின் ஒரு பகுதிதான் அவர்” என அவர் தெரிவித்துள்ளார்.