பீகாரின் தர்பங்காவிலிருந்து போட்டியிடும் 'தி பிளூரல்ஸ் பார்ட்டி’ கட்சியின் தலைவர் புஷ்பம் பிரியா, கருப்பு உடை மற்றும் மாஸ்க் மூலமே வலம் வருகிறார்.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் பீகார் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், பீகாரில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. அதில், ஒரு கட்சியாக 'தி பிளூரல்ஸ் பார்ட்டி'யும் நிற்கிறது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து திரும்பிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகளான புஷ்பம் பிரியா சவுத்ரி ஆரம்பித்திருக்கும் இந்தக் கட்சிதான் பீகாரின் புதிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு அந்தக் கட்சியை ஆரம்பித்த புஷ்பம் பிரியா, பீகாரின் பாரம்பரிய அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதுடன், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகவும் அறியப்படுகிறார். மதம் மற்றும் சாதி எல்லைகளைத் தாண்டிய ஒரு புதிய பிராண்ட் அரசியலுக்கு மாநிலத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறார். வெளிநாட்டுக் கல்வியுடன் வளர்ந்து வரும் இளம் தலைவராக இருக்கும் இவர், 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய ஆற்றலைக் கொண்டு வர விரும்புகிறார். மாற்றத்திற்கான தனது விருப்பங்களையும் அதில் இணைக்க முயற்சிக்கிறார். இந்த நிலையில், அவர் பீகாரின் தர்பங்காவிலிருந்து போட்டியிடும் அவர், அதற்காக கருப்பு உடை மற்றும் மாஸ்க் மூலமே வலம் வருகிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே தனது மாஸ்க்கைக் கழற்றுவேன் என சபதம் செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து புஷ்பம் பிரியா, “எனது கட்சியின் பெயர் மக்களின் பிரச்னைகளைப் பிரதிபலிக்கிறது. பன்மை என்பது அனைத்துச் சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் வழக்கமான பேச்சுவார்த்தைகளில் இது கடினமான பெயரல்லவா? கடந்த காலத்தில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டை மக்களால் உச்சரிக்க முடியவில்லை. நான் வித்தியாசமானவள்; எங்களுக்கென சொந்த சித்தாந்தம் உள்ளது. அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை உடை அணிகிறார்கள் என்று எனக்குத் தெரியாததால் நான் கருப்பு நிறத்தை அணிகிறேன். தேர்தல் அரசியலில் வெற்றியைப் பெறும்வரை மாஸ்க்கைக் கழற்றமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தர்பங்காவைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.யு சட்டமன்ற உறுப்பினர் வினோத் குமார் சவுத்ரியின் மகள்தான் இந்த புஷ்பம் பிரியா. அவரது தாத்தா, பேராசிரியர் உமாகாந்த் சவுத்ரி, முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய கூட்டாளியாகவும், சமதா கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். அவரது மாமா, வினய் குமார் சவுத்ரி, 2020 சட்டமன்றத் தேர்தலில் பெனிப்பூரில் இருந்து வெற்றி பெற்ற ஜே.டி.யு தலைவர் ஆவார். ஜூன் 13, 1987ஆம் ஆண்டு பிறந்த புஷ்பம் பிரியா, பட்டப்படிப்புக்காக புனேவுக்குச் செல்வதற்கு முன்பு தர்பங்காவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் அவர் இங்கிலாந்தில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுப் படிப்பில் முதுகலைப் பட்டமும், 2019இல் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன்பிறகு, அரசியலில் ஈடுபட்ட அவர், பீகார் அரசின் சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆலோசகராகப் பணியாற்றினார். 2020இல் கட்சி ஆரம்பித்தபோதே 148 இடங்களில் போட்டியிட்டார். இதில் சில சுயேச்சைகளும் அடங்குவர். இந்த முறை 243 இடங்களிலும் அவரது கட்சி போட்டியிடுகிறது, பாதி இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சிக்கு 'நகரம்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.