தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் நோட்டீஸ் முகநூல்
இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! என்ன காரணம்?

PT WEB

பிரதமர் நரேந்திர மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கமளிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆம் ஆத்மியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து உறுதி செய்யப்படாத சில தகவல்கள் பதிவிடப்பட்டன. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஒன்று என பாரதிய ஜனதா கட்சி சார்பில் நவம்பர் 10-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் “உரிய முறையில் பதில் அளிக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சன்வெர் தொகுதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “பெல் (BHEL) நிறுவனத்தை மோடி தனது தொழில்துறை நண்பர்களுக்கு வழங்கிவிட்டார்” என பேசினார்.

இது தவறானது என்றும், பொதுமக்களை தவறாக வழிநடத்துவது என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் வியாழன் இரவு 8 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பிரியங்காவிற்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.