சரத் பவார்
சரத் பவார் புதிய தலைமுறை
இந்தியா

மகாராஷ்டிரா: சரத் பவார் அணிக்கு புதிய கட்சிப் பெயர்.. தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

Prakash J

மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி பாஜக ஆதரவுடன் ஆட்சியிலுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார்.

53 எம்எல்ஏக்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 41 எம்எல்ஏக்கள் அஜித் பவாருக்கும், 12 பேர் சரத் பவாருக்கும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர்.

அஜித் பவார், சரத் பவார்

இருதரப்புமே தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், நேற்று (பிப்.6) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியது. அஜித்பவாருக்கே அதிக அளவிலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மேலவை தேர்தலை முன்னிட்டு, கட்சியின் பெயரைத் தேர்ந்தெடுக்கும்படி சரத் பவார் கேட்டு கொள்ளப்பட்டார். இன்று மாலை 4 மணிக்குள், அவர்களுடைய கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி, தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து சரத் பவார் தலைமையிலான தரப்பு 3 பெயர்களையும் 3 சின்னங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தது. ’தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார்’, ’தேசியவாத காங்கிரஸ் கட்சி - ஷரத்ராவ் பவார்’, மற்றும் ’என்சிபி-சரத் பவார்’ ஆகிய 3 பெயர்களையும், உதயசூரியன், ஒரு ஜோடி கண்ணாடி, ஆலமரம் ஆகிய சின்னங்களில் ஏதாவது ஒன்றைத் தரும்படி கேட்டு விண்ணப்பித்திருந்தது.

உதயசூரியன் மற்றும் ஒரு ஜோடி கண்ணாடி ஆகிய சின்னங்கள் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இறுதியாக ஆலமரத்தைத் தேர்வு செய்திருந்தது. அந்த வகையில், சரத் பவார் தலைமையிலான கட்சிக்கு ’தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திர பவார்’ என்ற பெயரை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், இந்தக் கட்சியின் சின்னமாக டீ கப், சூரியகாந்தி பூ ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.