உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவா வேண்டும். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் அரெஸ்ட்டும் ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து சைபர் போலீசார் அவ்வப்போது விழிப்புணர்வு தகவல்கள் அளித்து எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் ஏமாறுபவர்கள் ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படியான சம்பவம் ஒன்று, அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. இதில், பணத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டிருப்பதுதான் இன்னும் பேசுபொருளாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூரில் உள்ள பீடி கிராமத்தைச் சேர்ந்தவர், டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82). இவர் மராட்டிய அரசு தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ஃபிளேவியானா (79). இவர்களுக்கு குழந்தை நிலையில், இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 27ஆம் தேதி சாந்தன் மற்றும் ஃபிளேவியானா ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் ஆய்வு செய்ததில், சந்தன் தனது கழுத்தில் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனவும், அவரது கைகளிலும் காயங்கள் இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். ஃபிளேவியானா விஷம் குடித்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அந்த வீட்டில் 2 பக்க கடிதம் ஒன்று சிக்கியது. சாந்தன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “நானும் எனது மனைவியும் யாருடைய தயவிலும் வாழ விரும்பவில்லை. எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என அதில் எழுதப்பட்டிருப்பதாகவும், அதேசமயம், அந்தக் கடிதத்தில் சுமித் மற்றும் அணில் யாதவ் ஆகிய இரண்டு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
டெல்லி தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில் இருந்து சாந்தனிடம் பேசிய சுமித், ”உங்கள் பெயரில் போலி சிம் கார்டு வாங்கப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். பின்னர் பேசிய அணில் யாதவ் என்ற நபர், தன்னை சிபிஐ அதிகாரியாய்க் காட்டிக் கொண்டு, சாந்தனின் சொத்து விவரங்களை அவர் கேட்டுள்ளார். பின்னர், சாந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சாந்தன், மோசடிக்காரர்களின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.50 லட்சம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் அவர்கள் மேலும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்காக அந்த தம்பதியினர் தங்கள் நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர். மேலும் கடந்த ஜூன் 4ஆம் தேதி ரூ.7.15 லட்சத்திற்கு தங்க நகைக் கடன் வாங்கியதாக சாந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த நகை விற்கப்பட்டு, தங்கள் கடன்கள் அடைக்கப்பட வேண்டும் என்று சாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, தற்கொலைக்கு பிறகு தங்கள் உடல்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என்றும் சாந்தன் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை கடிதத்தின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையின் பேரிலும், போலீசார் சைபர் மோசடி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அமித் மற்றும் அணில் யாதவ் ஆகிய இரு நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!