ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரிலிருந்து தோராயமாக 22 கிமீ தொலைவில் உள்ள கைலாஷ்புரி கிராமத்தில் எக்லிங்ஜி கோயில் அமைந்துள்ளது. இது, சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலமாகும். இந்த தலம், கி.பி 734-753க்கு இடையில் பாப்பா ராவலால் நிறுவப்பட்டது மற்றும் மஹாராணா மோகால் (கி.பி 1421-1433) புதுப்பிக்கப்பட்டது. வெள்ளைப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயில் வளாகத்தில் 108 சிறிய கோயில்கள் உள்ளன. கருவறையில் நான்கு முகம் கொண்ட கருப்புப் பளிங்குக் கற்களால் ஆன ஏக்லிங்ஜி சிலையும், வெளியே வெள்ளியில் நந்தி சிலையும் உள்ளன. இந்தச் சிலை மகாராணா ரைமல் (கி.பி. 1473-1509) என்பவரால் நிறுவப்பட்டது.
இந்த நிலையில், கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில் மினி ஸ்கர்ட், பெர்முடாஸ் மற்றும் நைட் சூட் போன்ற குட்டையான ஆடைகளைப் பக்தர்கள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மொபைல் போன்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலின் தூய்மையைப் பாதுகாக்கவும், அதன் புனிதத்தை மதிக்கவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்த புதிய வழிகாட்டுதல்களைக் குறிப்பிடும் பேனரும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கோயிலுக்குள் புகைப்படம் எடுப்பது எப்போதும் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பார்வையாளர்கள் ஸ்விட்ச் ஆஃப் முறையில் தொலைபேசிகளைக் கொண்டுவர அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் செல்லப்பிராணிகள் மற்றும் ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கோயிலின் புனிதத்தை காக்க இந்த புதிய விதிகளை பக்தர்கள் மதிக்க வேண்டும் என்று கோயில் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. பல பார்வையாளர்கள் கோயிலுக்குள் பொருத்தமற்ற உடைகள் அணிந்து வந்து அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் இந்த தடைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்தக் கோயில் தவிர, ராஜஸ்தானில் உள்ள பிற கோயில்களுக்கும் ஒழுக்கம் மற்றும் கலாசார விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஆடைக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. உதய்பூரில் உள்ள ஜெகதீஷ் கோயில், ஜார்கண்ட் மகாதேவ் கோயில், பில்வாராவில் உள்ள கோத்ரி சர்புஜநாத் கோயில் ஆகியவற்றிலும் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.