விமானம் விபத்துக்கு உள்ளானால், பயணிகளின் உயிரைக் காப்பாற்றுவது விமானப் பணிப் பெண்கள்தான். கமலின் ‘விக்ரம்’ படத்தில், வீட்டுப் பணியாளராக இருக்கும் பெண் ரகசிய ஏஜெண்ட் ஒருவர், எதிரிகள் தாக்க வரும்போது விஸ்பரூபம் எடுத்து அவர்களைப் பந்தாடுவார் இல்லையா…
அதுபோலவே, விமானம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பறந்துகொண்டிருக்கும்போது இன்முகத்தோடு இருக்கும் விமானப் பணிப் பெண்கள், ஆபத்து என்று வரும்போது வேறொரு அவதாரம் எடுப்பர். கடந்த மாதம் கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லாமல், அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. அவர்களை மீட்டதில் Cabin Crew என்று அழைக்கப்படும் விமானப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.
90 வினாடிகள் பெரும்பாலான விமான நிறுவனங்கள் பெண்களையே Cabin Crew பணிகளுக்கு தேர்வு செய்கின்றன. விமான Cabin Crew- களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் 80 சதவீதம் பாதுகாப்பு சார்ததுதான். 20 சதவீதம் மட்டுமே உபசரிப்பு சார்ந்தது. விமான Cabin Crew-களுக்கு ஒரு விதி உண்டு.
விமானம் விபத்துக்குள்ளானால், அடுத்த 90 வினாடிகளுக்குள், அதாவது ஒன்றரை நிமிடத்துக்குள் பயணிகள் அனைவரையும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றிவிட வேண்டும். இப்படி 90 வினாடிகளில் துரிதமாக செயல்படுவதற்கு விமான Cabin Crew - களுக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுவதுண்டு.
படிப்பு காலகட்டத்தில் மட்டுமல்ல, பணியில் இருக்கும் காலகட்டத்திலும்கூட தினமும் அவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு விமானப் பயணத்தின்போதும் அவர்கள் இந்தப் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். அதுவும் ஒன்றல்ல இருமுறை. ஓடுதளத்திலிருந்து விமானம் மேலெழும்பும் போதும், தரையிறங்கும் போதும்தான் விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஒவ்வொருமுறையும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன்பாக பயணிகள் அனைவரையும் இருக்கையில் அமர வைத்துவிட்டு, விமானப் பணிப் பெண்கள் தங்கள் இருக்கைக்கு சென்று அமர்வார்கள். அமர்ந்ததும், 90 வினாடிகள் பயிற்சியை மனத் திரையில் ஓட்டிப்பார்க்க வேண்டும். விமானம் விபத்துக்குள்ளானால் என்னென்ன செய்ய வேண்டும், பயணிகளை எப்படி மீட்க வேண்டும், எந்தக் கதவின் வழியாக அவர்களை வெளியே அழைத்து வர வேண்டும், எதாவது ஒரு கதவு செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் ஒவ்வொரு அசைவாக மனத் திரைக்குள் அவர்கள் ஓட்டிப் பார்ப்பார்கள். அதேபோல், தரையிறங்குவதற்கு முன்பும் இந்தப் பயிற்சியை அவர்கள் மேற்கொள்வார்கள்.
இந்தப் பயிற்சி காரணமாகவே அவர்களால் ஆபத்து சமயத்தில், துரிதமாக செயல்பட முடிகிறது. அவர்களது மீட்புப் பணிக்கு இடையூறாக இருப்பது பயணிகள்தான். விமான விபத்துக்குள்ளானால், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் பயணிகள் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, உடைமைகளை எடுப்பதில் அல்ல. பல சமயங்களில், பயணிகள் உடைமைகளை எடுப்பதில் தீவிரம் காட்டுவதில் மீட்புப் பணியில் நெருக்கடி ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. விமானம் பறப்பதற்கு முன்பு விமானப் பணியாளர்கள், ஒருவேளை விமானம் விபத்துக்குள்ளானால் பயணிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குவார்கள்.
ஆனால், பெரும்பாலான பயணிகள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வது கிடையாது. ஆனால், விமானம் விபத்துக்குள்ளாகும் சமயத்தில்தான் அவர்கள் அறிவுறுத்திய ஒவ்வொரு வார்த்தைகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரியவரும். அடுத்த முறை, விமானத்தில் பயணிக்கும்போது விமானப் பணியாளர்களை இந்தக் கோணத்தில் அணுகிப் பாருங்கள், நமது பாதுகாப்பில் அவர்களது முக்கியத்துவத்தை ஆழமாக உணர முடியும்!