டொனால்டு ட்ரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். முன்னதாக, டொனால்டு ட்ரம்ப், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி ஆற்றிய உரை, கேப்பிடல் ஹில் கலவரத்தைத் தூண்டும் விதமாக இருந்தது என்று, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. அதில், ட்ரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, அந்த இரண்டு உரைகளும் ஒரே வீடியோவில் பேசப்பட்டது போன்று தோற்றம் அளிப்பதாக இருந்தது. இதன்மூலம், உரையை திரித்து வெளியிட்டதாக ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிபிசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போலியான செய்தி என்றும் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக பிபிசி ஆய்வு செய்ய உத்தரவிட்ட நிலையில், முன்னாள் ஆலோசகரான மைக்கேல் பிரெஸ்காட் தலைமையிலான பிபிசி குழுவும் ட்ரம்ப் கலவரத்தை தூண்டியது போன்ற பிம்பத்தை ஆவணப்படம் உருவாக்கி இருந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இது பிபிசிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த தகவலும் வெளியே கசிந்தது. இதற்கிடையே, மைக்கேல் பிரெஸ்காட் கடந்த ஜூன் மாதம் தாம் வகித்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேச்சை எடிட் செய்து பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இந்த ராஜினாமாக்கள் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும் என பிரிட்டன் அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேசமயம் ட்ரம்ப் இதனை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் பேசிய அந்தச் சிறப்பான பேச்சை ஜோடித்து மாட்டிக் கொண்டதால் பிபிசியின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது ராஜினாமா செய்கிறார்கள் அல்லது வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், ராஜினாமா தொடர்பாக டிம் டேவி, “எல்லா பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே பிபிசியும் பூரணத்துவம் கொண்டது அல்ல. நாம் எப்போதும் திறந்த மனப்பான்மையுடன், வெளிப்படையாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். இது மட்டுமே இந்த முடிவுக்குக் காரணம் இல்லையென்றாலும், பிபிசி செய்திகளைச் சுற்றி நடக்கும் விவாதங்கள் இதற்கு வித்திட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பிபிசி நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆங்காங்கே சில தவறுகள் நடந்திருக்கின்றன. அதற்கு இயகுகுநர் ஜெனரலாக நானே பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்து டெபோரா டர்னஸ், ”இதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன். இந்தப் பழி என்னுடனேயே முடிவுக்கு வர வேண்டும். பொது வாழ்க்கையில் தலைவர்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன். சில தவறுகள் நடந்திருக்கின்றன என்றாலும், பிபிசி நியூஸ் ஒரு சார்புடையதாக செயல்படுகிறது என்கின்ற குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பிபிசியின் தலைமையில் டேவி, ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், கேரி லின்கர், கிளாஸ்டன்பரியில் பாப் வைலன், காஸா உள்ளிட்ட பிரச்னைகளையும் எதிர்கொண்டுள்ளார். ஆனால், அவை எதுவும் அவருக்கு எதிராக அமையவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்திய சர்ச்சையிலிருந்தும் அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் தகவல் வெளியே கசிந்ததால், டேவி ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
டிம் டேவி, செப்டம்பர் 2020இல் பிபிசியின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இயக்குநர் ஜெனரலாக பதவியேறுவதற்கு முன்பு, அவர் ஏழு ஆண்டுகள் பிபிசி ஸ்டுடியோஸின் தலைமை நிர்வாகியாக இருந்தார். பிபிசியில் சேருவதற்கு முன்பு, டேவி ப்ராக்டர் & கேம்பிள் மற்றும் பெப்சிகோ போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார். டேவியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளில் ஒருவரான ஜே ஹன்ட் மற்றும் 2013 முதல் 2018 வரை பிபிசியின் செய்தித் தலைவராக இருந்த ஜேம்ஸ் ஹார்டிங் ஆகியோர் அடுத்த நிர்வாக ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தேர்ந்தெடுக்கப்படும் நபர், பிபிசியின் 103 ஆண்டுகால வரலாற்றில் 18வது இயக்குநர் ஜெனரலாக இருப்பார்.