டொமினிக் மார்ட்டின்
டொமினிக் மார்ட்டின் pt web
இந்தியா

“என் மனைவியின் இல்லத்தில் வைத்து வெடிபொருள் தயாரித்தேன்...” - டொமினிக் மார்ட்டின் புதிய வாக்குமூலம்

Angeshwar G

கொச்சி அருகே களமச்சேரியில் யாகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோதே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், மாலையில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார். இந்நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

டொமினிக் மார்ட்டின்

படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள மாநில காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். களமச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முகாமிட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படைப்பிரிவு அதிகாரிகளும் களமச்சேரியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது தாம்தான் என கூறி டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர்தான் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், வெடிகுண்டு தயாரிப்பதற்கான நாட்டு வெடிகுண்டு மருந்துகளை கொச்சி நகர்ப்பகுதியிலேயே வாங்கியது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வெடிப் பொருட்கள் எப்போது வாங்கப்பட்டது, எதற்காக வாங்கப்பட்டது என்பதான முழு விவரங்களையும் டொமினிக் மார்ட்டின் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெடி பொருட்களை வாங்கிய பின் கொச்சியை அடுத்த ஆலுவா பகுதியில் உள்ள அவர் மனைவியின் இல்லத்தில் வைத்துதான் வெடியை தயாரித்துள்ளார். நேற்று காலை சுமார் 5 மணியளவில் மனைவியின் வீட்டில் இருந்து கிளம்பி கொச்சி பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளார். இதன் பிறகான தொடர் விசாரணை தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது மூன்று பிரிவுகளின் கீழ் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.