பீகாரில் ஹிஜாப் சர்ச்சை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆயுஷ் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் பணியில் சேருவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் இன்னும் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். இந்த நிலையில், பீகாரில் சமீபத்தில், ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், 10 பேருக்கு நியமனக் கடிதங்களை நிதிஷ் குமார் வழங்கினார். அதில் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் என்ற பெண்ணும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் ஹிஜாப்பை அகற்றும்படி முதல்வர் சைகை காட்டினார். அந்தப் பெண் ஹிஜாப்பை அகற்றும் முன்பே, நிதிஷ் குமார் ஹிஜாப்பை பிடித்து கீழே இழுத்தார். நிதிஷ் குமார் இப்படிச் செய்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இக்காணொளி இணையத்தில் வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மாநில எதிர்க்கட்சிகளான ஆர்.ஜே.டி., காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா போன்றவை கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த சர்ச்சை தொடர்பாக தொடர்ந்து நிதிஷ் குமாருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவரோ அல்லது அவரது அலுவலகத்திடமிருந்தோ எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இதற்கிடையே, ஆயுஷ் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் பணியில் சேருவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், அவர் இன்னும் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய அரசுப் பணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
பாட்னாவின் சதரில் உள்ள சபல்பூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பர்வீன் சேர்வதற்கான பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட அறுவைச்சிகிச்சை நிபுணரான விஜய்குமார், பர்வீன் இதுநாள் வரை அங்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து பர்வீன் எந்த தகவலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பர்வீனும் அவரது குடும்பத்தினரும் பாட்னாவிலிருந்து கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும், அவரது கணவர் அவர் வெளியே செல்வதையோ அல்லது ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையோ தடுத்திருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அரசு திப்பி கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மஹ்பூசூர் ரஹ்மான், ’ஆயுஷ் மருத்துவர் நுஸ்ரத் பர்வீன் இன்னும் பணியில் சேரவில்லை. அவரது எதிர்கால நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அவர் கொல்கத்தாவுக்கு சென்றதில் எந்த உண்மையும் இல்லை. உயர்கல்வி படிக்கவும், அரசுப் பணியில் சேரவும் அவருக்கு விருப்பம் இருந்தது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ முதலமைச்சர் மீது கோபப்படவில்லை. ஆனால் ஊடகங்களால் கிளறிவிட்ட சர்ச்சையால் அவர் ஏமாற்றமடைந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ”இந்த வழக்கில் 'சர்ச்சை' என்ற வார்த்தையைக் கேட்பது எனக்கு வேதனை அளிக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏதேனும் சச்சரவு இருக்க முடியுமா? இதிலிருந்து நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்? முதல்வர், பெண் மாணவர்களை தனது மகள்களாகக் கருதுகிறார்” எனத் தெரிவித்திருந்தார்.