அதானி குழும ஊழல் விவகாரத்தில் மோதலுடன் தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், அண்ணல் அம்பேத்கரை அவமதித்த விவகாரத்தில் மோதலுடன் முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இனிவரும் நாட்களில் எந்த ஒரு வாயிலிலும் அவைக்கு உள்ளே அல்லது வெளியே நின்று போராட்டம் நடத்தக்கூடாது என்று மக்களவை சபாநாயகர் தெரிவித்தார்.
குளிர்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளில், அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்பதுதான் பிரதான முழக்கமாக இருந்தது. “பாஜக எம்.பிக்கள் இருவரை காயப்படுத்திய ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது பாஜகவின் முழக்கமாக எதிரொலித்தது.
இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது. கூட்டத்தொடர் முடிவதற்குள் "ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதாக்களை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் என்பதால், தொடர் முழக்கங்களிடையே சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், குழுவுக்கான தீர்மானத்தை முன் வைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, திமுகவின் செல்வகணபதி, பாரதிய ஜனதா கட்சியின் பி பி சௌத்ரி, அனுராக் தாகூர் மற்றும் பன்சுரி சுவராஜ் உள்ளிட்ட 27 மக்களவை உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது என அறிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
ஏற்கனவே வக்ஃப் மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்துக்காக அரசமைப்பு சாசனத்தில் செய்யப்படும் 129 ஆவது திருத்தம் தொடர்பான மசோதாவை பரிசீலிப்பதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, விரைவில் பணிகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் இனிவரும் நாட்களில் எந்த ஒரு வாயிலிலும் அவைக்கு உள்ளே அல்லது வெளியே நின்று போராட்டம் உள்ளிட்டவை நடத்தக் கூடாது எனவும், இது முறையான அணுகுமுறை அல்ல எனவும் ஓம் பிர்லா தெரிவித்தார். மாநிலங்களவையிலும் அவை கூடிய நேரம் முதலே தொடர் முழக்கங்களால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் "ஒரு நாடு, ஒரு தேர்தல்" மசோதாக்களை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெறும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களா ல் அவையின் அலுவல்கள் பாதிக்கப்பட்டதை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மொத்தத்தில் சர்ச்சைகள், மோதல்கள், வாக்குவாதங்களுடன் முடிந்திருக்கிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர். புதிய தலைமுறைக்காக புது தில்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்.