மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழி திணிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனசேனா கட்சியின் 12ஆவது தொடக்க விழாவில் பேசிய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண், ”பல மொழிகள் நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டிற்கும் இந்த கொள்கை பொருந்தும். மொழிகளுக்கு எதிராக வெறுப்புணர்வை வளர்ப்பது விவேகமற்றது. இந்தியை எதிர்ப்பவர்கள், லாபத்திற்காக திரைப்படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்வது ஏன்?” என கேள்வி எழுப்பியிருந்தார். இவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. குறிப்பாக, பவன் கல்யாண் கருத்துக்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது. நடிகர் பிரகாஷ் ராஜும் கடும் எதிர்வினையாற்றியிருந்தார்.
தற்போது திமுகவின் மக்களவை எம்பி கனிமொழியும் பவன் கல்யாணுக்கு எதிராகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பாஜகவுக்கு முன், பாஜகவுக்கு பின்’ என பவன் கல்யாண் பேசியதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள கனிமொழி, “பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பாக, நம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் கட்சி தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு பவன் கல்யாண் குறிப்பிட்டிருந்தார். மொழி பேதங்களை கடந்து தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெவ்வேறு காலகட்டங்களில் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளையும் கனிமொழி பகிர்ந்துள்ளார். இதற்கிடையே, பவன் கல்யாண் இவ்விவகாரம் தொடர்பாக மீண்டும் பதிவிட்டிருக்கும் கருத்து வைரலாகி வருகிறது.