ஆ ராசா எக்ஸ் தளம்
இந்தியா

“பாஜக பிசாசா அல்லது கடவுளா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்” - நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆ. ராசா!

அரசியலைமைப்பின் எழுபத்தைந்தாண்டு நிறைவை ஒட்டி நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைச் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் உரையாற்றியுள்ளார்.

PT WEB

அரசியலைமைப்பின் எழுபத்தைந்தாண்டு நிறைவை ஒட்டி நாடாளுமன்ற மக்களவையில் திமுக துணைச் பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் உரையாற்றியுள்ளார். மக்களவையில் எம்.பி. ஆ.ராசா நேற்று பேசுயவற்றின் முழு விவரம், இங்கே:

மக்களவையில் ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு பின்வருமாறு :

“அரசியலமைப்பின் ஆவணத்தை ஒரு கட்சி ஆவணமாக கருத முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறுகிறார். அவரின் கூற்று சரிதான். நாட்டு மக்களில் ஆவணத்தின் உரிமையை ஒரு தரப்பினர் மட்டும் கோர முடியாதுதான்.

அம்பேத்கர்

நேருவுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன், வல்லபாய் படேல், சரோஜினி நாயுடு, ஜெயகர், ஷியாம் முகர்ஜி உட்பட அனைவரும் அரசியலமைப்பு உருவாக பங்களித்தனர். ஆனால் RSS அல்லது இந்து மகாசபையின் பங்களிப்பு மட்டும் வரலாற்றில் இல்லை. பாஜகவினரின் முன்னோர்களான ஆர். எஸ். எஸ். அமைப்பினர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் என்ன வகையான பங்களிப்பை வழங்கினார்கள் என பாஜக இங்கே கூற இயலுமா?

நாம் இங்கே அரசியலமைப்பு பற்றி விவாதிக்கிறோம். ஆனால் பாஜகவினர் பாபாசாகேப் அம்பேத்கர் காங்கிரஸால் அவமானப்படுத்தப்பட்டார், பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் கொண்டாடவே இல்லை, மந்திரிசபையில் இடமளிக்கவில்லை என பேசிக்கொண்டிருக்கின்றனர். மேலும், ராஜ்நாத், ரிஜ்ஜு மற்றும் முன் வரிசையில் இருப்பவர்கள் தங்கள் கடந்தகால செயல்பாடுகளுக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஒரு போலித்தனமான அறிக்கையை அளித்துள்ளனர்.

ஆ.ராசா

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பாஜகவின் முன்னோர்கள் அளித்த பங்களிப்பு மற்றும் இந்திய நாட்டின் விடுதலைக்கு பிறகு இன்றுவரை அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்த பாஜக செய்த முயற்சிகள் என்ன என்று மக்களவையில் இங்கிருக்கும் பாஜகவினர் யாராவது சொல்ல இயலுமா?

தங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக சொல்லிக்கொள்பவர்கள் எனது கேள்விக்கு பதிலளிக்கவும்.

நாட்டின் அரசியலமைப்பு பதவியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பாஜகவின் துணைத் தலைவர் தேர்தலின்போது பாஜக மக்களவையில் 400 இடங்களைப் பெற்றால் கேசவானந்த பாரதி வழக்கின் அடிப்படையில் அரசியலமைப்பின் கட்டமைப்பை மாற்றுவோம் என்றும் இந்தியாவை இந்து ராஷ்டிரம் என பெயர் மாற்றம் செய்வோம் என்றும் வெளிப்படையாக பொதுவெளியில் கூறினார். இது உண்மைதானே? எங்களிடம் அதற்கான ஆதாரம் இருக்கின்றது.

அம்பேத்கர் மூன்று விசயங்களில் தெளிவாக இருந்தார். அரசியலமைப்பு, அரசியலமைப்பு தத்துவம் மற்றும் அரசியலமைப்பின் வழி நடப்பது. நாட்டில் அரசியலமைப்பு தத்துவம் உள்ளதாலேயே நாடு அதன் வழியில் நடக்கிறது என்பது பொருள் அல்ல. அப்படித்தான் இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டதத்துவம் உள்ளது.

இந்த அம்பேத்கர் உரையில்,

1973ல் நடந்த கேசவானந்த பாரதி வழக்கு நாட்டிலேயே அதுவரை இல்லாத அளவு பதின்மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அமர்வு.

பிரபல வழக்கறிஞர் நானி பால்கிவாலா, 68 நாட்கள் தொடர்ந்து வாதிட்ட வழக்கில் 100 பக்கங்களுக்குமேல் தீர்ப்பு வந்தது. ஒரு சட்ட மாணவராக நான் அதை பலமுறை படித்துள்ளேன். இந்த விவாதத்திற்காககூட, நேற்று இரவு மூன்று முறை படித்தேன்.

கேசவானந்த பாரதி வழக்கை பற்றி பல சட்ட நிபுனர்களும் நிறைய கட்டுரைகள் எழுதினார்கள். கேசவானந்த பாரதி வழக்கை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனெனில் அரசியலைப்பின் அனைத்து விதிகளும் மாற்றத்திற்குள்ளான வழக்கு அது. ஏனெனில் அதுதான் அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு. அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைத் தவிர அனைத்து அரசியலமைப்பு விதிகளையும் நாம் திருத்தலாம்.

பாஜக குழப்பத்தில் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் எத்தனை முறை மாற்றப்படும் என கேட்கிறீர்கள். ஆம், அதன் விதிகள் மாற்றப்படலாம். ஆனால் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றக் கூடாது. அதுதான் அரசியலைப்பின் ஆன்மா.

குற்றவியல் சட்டம்

அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பு முழு அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கூறுகள், கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு கூறிய பதின்மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அரசியலைப்பின் ஆறு விதிகளை சுட்டிக்காட்டியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறையின் பாரபட்சமற்றதன்மை. சுதந்திரமான நீதித்துறை. அரசியலமைப்பில் உள்ள இந்த ஆறு கூறுகளையும் தொடுவதற்கு பாஜகவிற்கு தகுதி இல்லை. ஏனெனில் பாஜக இதற்கு எதிராக இருக்கிறது.

நான் 6 முறை எம்.பி., மூன்று முறை அமைச்சராக இருந்த சட்ட மாணவன். நான் முட்டாளும் இல்லை அப்பாவியும் அல்ல. மக்களவையில் ஜனநாயகம் பற்றி பேசும்போதெல்லாம் மிசா, எமர்ஜென்சி என்று பாஜகவினர் கூச்சல் இருகின்றனர்.

ஆம். எங்கள் தலைவர் எமர்ஜென்சியில் கைது செய்யப்பட்டார். தென்னிந்திய, தென்னாப்பிரிக்க, இலக்கியத்தை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? கறுப்பர்களின் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த பெஞ்சமின் மொலைஸ் என்ற ஒரு பெரிய கவிஞர் இருக்கிறார். அவர் தூக்கிலிடப்பட்டார். அவரது ஒரு கவிதையை பகிர விரும்புகிறேன். 22 வயது பெண் அரசாங்கத்தால் தேச விரோத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார்.

அவள் ஆறு மாதங்களுக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையால் ஏதேனும் அநீதி இழைக்கப்படுகிறதா என்று நீதிபதி கேட்டார். அவள் அருகே இருந்த இரண்டு காவலர்களை பார்த்துவிட்டு நீதிபதியிடம், அந்த இளம்பெண், ஐயா, எனக்கு ஒன்றும் அநீதி இழைக்கவில்லை. ஆனால் காவலர்களின் இந்த லத்தியோ தடியோ விந்தணுவை வெளியேற்றும் தன்மை கொண்டிருந்தால் நான் இன்று ஆறு மாத கர்ப்பிணியாக இருந்திருக்க வேண்டும் என்றாள்.

நான் இங்கே இதை குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் திமுகவுக்கும் அத்தனை கொடுமைகளும் நடந்தது. இருபத்தி நான்கு வயது இளைஞன் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கே அவன் கடுமையாக தாக்கப்படுகிறான். அவனை பார்க்க சென்ற அவனது தந்தை ஒருபோதும் முழுக்கைச் சட்டை அணியாத மகன் முழுக்கைச் சட்டை அணிந்திருந்ததை பார்த்துவிட்டு அந்த புத்திசாலி தந்தை, “காவல்துறையால் உனக்கு காயம் ஏற்பட்டதா?” என கேட்டார். மகன் சொன்னான் “என் காயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாட்டின் அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஏற்பட்ட காயங்களில் இருந்து அதை மீட்டெடுங்கள் என்று. அந்த இளைஞன் வேறாருமல்ல, தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த தந்தை டாக்டர் கலைஞர் கருணாநிதி. நாங்கள் வலியை அனுபவித்தவர்கள். நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.

கலைஞர் கருணாநிதி

எல்லாவற்றையும் தாண்டி வந்து நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம் என்றால் நாங்கள் அரசியலமைப்பு அனைத்துக்கும் மேலானது என நம்புகிறோம். காங்கிரஸுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் நாங்கள் அவர்களுடன் கூட்டணியில் இருப்பதற்கு காரணம் நாங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதுதான். எங்களுக்கு யாருடன் கூட்டணி என்பதைவிட கொள்கையே முக்கியம்.

மிசாவின்போது ஜனநாயகம் மட்டுமே காயம்கொண்டது ஆனால் தற்போது பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டம், சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை பாரபட்சமின்மை என ஆறு கூறுகளும் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

அதை பேசத்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம். பதவி, பணத்திற்காக அல்ல. தந்தை ஸ்டேன் சுவாமி தனது முழு வாழ்க்கையையும் பழங்குடியினருக்காக அர்ப்பணித்தவர். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட என்பத்தைந்து வயதான அவரை பாஜக கைது செய்தது. பிணை வழங்கவில்லை. என்ஐஏ அனுமதிக்கவில்லை, மூன்றாவது முறையாக பிணை விண்ணப்பம் கொடுத்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கையில் ஸ்டான் சுவாமி மருத்துவமனையில் இறந்துவிட்டார் என செய்தி வருகிறது. உடனே நீதிபதிகள், ஸ்டான் சுவாமியின் பணிமீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது இறப்பு அதிர்ச்சியாக உள்ளது. மன்னிக்கவும். எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்றனர். இதுதான் ஜனநாயகமா?

ஸ்டேன் ஸ்வாமியின் தனது இறுதிக்குறிப்பில் சொல்கிறார். ‘இன்று எனக்கு நடப்பது எனக்கு மட்டுமே நடப்பதல்ல. முக்கிய அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர் தலைவர்கள் என இந்த அரசின் தவறுகளுக்கு எதிராக குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என இந்த நாடு நன்கு அறியும். இதற்கான விலையை நான் கொடுத்துதான் ஆகவேண்டும்”’ என்று

அவர் கூறியதை போலவே அதற்கான விலையை அவர் கொடுத்தார். ஒருநாள் இவை அனைத்துக்குமாக பாஜக விலை கொடுக்க வேண்டியது வரும்.

அடுத்து மதச்சார்பின்மை, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் கே.டி.ஷா, அரசியலமைப்பில் மதச்சார்பின்மையை நுழைக்க விரும்பியபோது, அம்பேத்கர் கூறினார், ஆர்ட்டிக்கிள் 15, 25, 28 அனைத்தும் மதத்தின் அடிப்படையிலான அனைத்து பாகுபாடுகளையும் தடைசெய்கிறது, மேலும் மதச்சார்பின்மையை பாதுகாக்கிறது, அரசியலமைப்பே முழுமையாக மதச்சார்பற்றது. பாகிஸ்தான் ஒரு கோட்பாட்டு நாடு என்று அறிவிக்கப்பட்டது முழு நாட்டிற்கும் தெரியும். ஆனால் இந்தியாவுக்கு அப்படி எதுவுமில்லை. ஆர்ட்டிக்கிள் 15, 26, 27, 28ஐ இணைத்து, மதச்சார்பற்ற அரசு இருக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை, ஏனென்றால், அப்படி ஒரு மோசமான நிலை இந்த நாட்டிற்கு வராது என்றார் அம்பேத்கர்.

இவ்வளவு மோசமான பாஜக ஆட்சிக்கு வரும் என்று அன்று அவர் அறிந்திருக்கவில்லை.

அம்பேத்கர்

இந்து தேசியம் மற்றும் முஸ்லிம் தேசியம் எனும் இரு தேசக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் ஜின்னா என்று நம்புகிறோம். இல்லை, 1924-லேயே சாவர்க்கர் அதைச் செய்தார். சாவர்க்கரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்பேத்கர் தெளிவாகச் சொன்னார், “இந்த நாட்டிற்கு இந்து ராஜ்ஜியம் வந்தால், அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். என்ன விலை கொடுத்தாவது அதை நிறுத்த வேண்டும்” என்று. ஆனால் பிரதமர், மிகவும் கவனமாக, புத்திசாலித்தனமாக, தந்திரமாக தன் சுதந்திரதின உரையில் சாவர்க்கர் மற்றும் அம்பேத்கர் இருவரையும் ஒரே பீடத்தில் வைத்து ஒரே அளவுகோலில் புகழ்கிறார், எங்களை பொறுத்தவரையில் இது முற்றிலும் தவறானது.

சட்டத்தின் ஆட்சியின் கீழ் மூன்று விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். மணிப்பூர், பில்கிஸ் பானு மற்றும் மல்யுத்த வீரர்கள் மீது நடந்த தாக்குதல். இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி எங்கே நடக்கிறது? பகல் பலாத்காரம்! பகல் கொலை! நீதி இல்லை! இதுதான் சட்டத்தின் ஆட்சி.

இன்று வலியுடன் சொல்கிறேன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு தலித் உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல அனைத்து தகுதியும் இருந்தும் பாஜக அரசு அவரை கேரளாவில் தலைமை நீதிபதியாக பதவி கொடுத்து அவரது திறமை மற்றும் தகுதியை புறக்கணித்துவிட்டது. இதுதான் சமூக நீதியா?

அம்பேத்கர் அரசியலமைப்பை எரிக்க விரும்பபினார் என்றும் பலரும் மேற்கோள் காட்டுகிறார்கள். ஆம், அம்பேத்கர் அப்படி கூறினார். காரணம் இதுதான். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மசோதா சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சாதியினர் சிறப்பு சலுகைகள் கேட்டனர்.

“ஆந்திராவுக்கு மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கினால், ஆளுநருக்கு சிறப்பு அனுமதி, சிறப்பு அதிகாரம் வழங்கப்படலாம் என சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் அச்சத்தில் உள்ளனர்” என்றார் அம்பேத்கர். அதை தொடர்ந்து அம்பேத்கரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் உருவாக்கிய அரசியலமைப்பை நீங்களே எரிக்க வேண்டும் என கூறியதன் காரணம் என்ன என கேட்டதற்கு, “கடவுளுக்கு ஒரு கோயில் கட்டுகிறோம். பிசாசு வந்து குடியிருந்தால் கோயிலை இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை அல்லவா?” என்று கேட்டார்.

பாஜக பிசாசா அல்லது கடவுளா என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்!” என்றார்.