ஆ.ராசா
ஆ.ராசா ட்விட்டர்
இந்தியா

”இந்த தேசம் பேசட்டும்” - ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கும் முறை.. மத்திய அரசை கடுமையாக சாடிய ஆ.ராசா!

Prakash J

சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏல முறைக்குப் பதிலாக உரிமம் வழங்கும் முறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், இரண்டு அவைகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அந்த வகையில், டெலிகாம் துறைக்கான புதிய வரைவு மசோதாவும் நேற்று (டிச.21) நிறைவேற்றப்பட்டது. தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி, தொலைத்தொடர்பு சேவை, தொலைத்தொடர்பு வலைப்பின்னல் (நெட்ஒர்க்ஸ்), அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டுவரப்பட்ட மசோதா, நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது. முன்னதாக, இந்த மசோதா, டிசம்பர் 20ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க: குடும்பத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பு: தென்னாப்ரிக்காவிலிருந்து திடீரென மும்பை திரும்பிய கோலி!

இந்த மசோதா, ’உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள்’ (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும், தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். சிம் பாக்ஸ் போன்றவற்றின்மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால், 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

மக்களவை

இந்த மசோதாவில் சாட்டிலைட் இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏல முறைக்குப் பதிலாக உரிமம் வழங்கும் முறையை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், சாட்டிலைட்களைப் பயன்படுத்தி இணையச் சேவை வழங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை நடத்தி வருகிறார். எனினும், இந்த நடவடிக்கைக்கு உலகளவில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில், இணையச் சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்க ஏல முறைக்குப் பதிலாக உரிமம் வழங்கும் முறையை மத்திய அரசு முன்மொழிந்திருப்பதால் மீண்டும் இவ்விவகாரம் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

ஏனென்றால் ஸ்பெக்ட்ரத்தை உரிமமாகத் தருவதற்குப் பதிலாக ஏலம் தர வேண்டும். இல்லையென்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என விவாதம் கிளம்பியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சமயத்தில்கூட இதுகுறித்தே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஸ்பெக்ட்ரத்தை ஏலம்விடாமல் உரிமமாக வழங்கியதால் அரசுக்குப் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் மத்திய அரசின் முன்மொழிவு விவகாரமும் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

இதுகுறித்து திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ”அலைக்கற்றை Spectrum ஏலம் விடப்படவில்லை என்று என்னை எள்ளி நகையாடிய கோமாளிகள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று இந்த தேசம் பேசட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பதிவில் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.

இதையும் படிக்க: பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!