புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் வென்ற நிலையில், அதில் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, நாம் தமிழர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. தவெக தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியிருந்தது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், தொடக்கத்தில் இருந்தே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 8,501 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றிபெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் 4,876 வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், திமுக வேட்பாளர் 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார். டெபாசிட் பெற 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெறவேண்டும் என்ற நிலையில், அதைப் பெற முடியாமல் திமுக வேட்பாளர் சேது டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி நோட்டாவைவிட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 225 வாக்குகள் பதிவான நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா குமாரி 172 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.